INCIDENT IN CUDDALORE

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்த அருள்மொழி என்பவரது மகன் வினோத்குமார் (24). இவர் சென்னையில் தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் வினோத்குமார் கடந்த 11-ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்காக கடலூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். இந்த சூழலில் கடந்த 16-ஆம் தேதி வினோத்குமார் வீட்டிற்கு காரில் வந்த ஒரு கும்பல் தாங்கள் சென்னையிலிருந்து வந்திருப்பதாக கூறி வினோத்குமாரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். பின்னர் வினோத்குமார் குறித்து எந்த தகவலும் தெரியாததால் சந்தேகமடைந்த வினோத்குமாரின் தந்தை அருள்மொழி இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் தனது மகனை ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றதாக 16-ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கடந்த 19-ஆம் தேதி கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உதவி ஆய்வாளர் எழில்தாசன் விசாரணை நடத்தி வந்தார்.

Advertisment

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதி போலீசார் நேற்று காலை கடலூர் புதுநகர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதியிலுள்ள ராமாபுரத்தில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு சாலையோரம் கிடந்ததாகவும், விசாரணையில் அவர் வினோத்குமார் என்பதும் தெரியவந்ததாகவும் தெரிவித்தனர். அதையடுத்து வினோத்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேரில் பார்வையிட்டு இறந்தது வினோத்குமார் தான் என உறுதியளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்

அதனைத் தொடர்ந்து கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் உதயகுமார், உதவி ஆய்வாளர் எழில்தாசன் ஆகியோர் வினோத்குமாரின் பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறி அவர்களை கொலை செய்யப்பட்டுள்ள வாலிபர் வினோத்குமார் தான் என உறுதி செய்வதற்காக ஆந்திர போலீசாருடன் அனுப்பி வைத்தனர். இன்று சடலத்தை உறுதிசெய்யும் வினோத்குமாரின் பெற்றோர்கள் அவரது சடலத்தை அங்கேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வதாக தெரிகிறது.

Advertisment

இதுகுறித்து இரு மாநில, இரு காவல்நிலைய காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் வேலை பார்த்தகடலூர் வாலிபர் ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.