
இன்று, கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த கவிதா என்ற பெண் மீது அங்கு வந்த மர்ம நபர் ஆசிட் வீசி உள்ளார். இதனால் அலறித் துடித்த கவிதாவை நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பெண் மீது ஆசிட் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றவரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் மடக்கிப் பிடித்து கோவை மாநகர போலீசில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, எதற்காக இந்த சம்பவத்தில் ஈடுபட்டார் என விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், ஆசிட் வீசியது அந்தப் பெண்ணின் கணவர் எனத் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கோவை ராமநாதபுரம் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்த சிவா என்பதும் அவருடைய மனைவியான கவிதா மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த கவிதா கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பெண் பயணி ஒருவரிடம் 10 சவரன் தங்க நகையைப் பறித்துள்ளார். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இன்று வழக்கில் ஆஜராவதற்காக கவிதா நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். அப்பொழுது அவரை பின்தொடர்ந்து வந்த அவரது கணவர் சிவா நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து அவரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் எடுத்து வந்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த சல்ஃபர் ஆசிட்டை கவிதாவின் முகம் மற்றும் உடல் மேல் பரவலாக வீசியுள்ளார். இதன் பின்னரே அங்கிருந்த வழக்கறிஞர்கள் கவிதாவை மீட்டதோடு அவரது கணவரை தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பல்வேறு திருட்டு வழக்குகளில் சிக்கியதால் கவிதாவிற்கும் அவரது கணவர் சிவாவிற்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சிவா ஆசிட் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.