Skip to main content

"கரோனாவால் பிரிந்துவிடுவோமோ" - அச்சத்தில் தற்கொலை செய்துகொண்ட தம்பதிகள்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

Incident in chennai fear of being separated by Corona!

 

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 26,465 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 197 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் 124 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 73 பேரும் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 15,171 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

இந்நிலையில் மதுரவாயலில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு பிரிந்துவிடுவோமோ என்ற பயத்தில் முதிய தம்பதிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை மதுரவாயல் வேல் நகரைச் சேர்ந்த 70 வயது முதியவர் அர்ஜுன். அவரது மனைவி அஞ்சலாட்சி. இவர்களுக்கு திருமணம் ஆகி இதுவரை குழந்தைகள் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்தனர். சில நாட்களாக இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர்களது வீட்டிற்கு அருகில் வசிக்கும் உறவினர் ஒருவர் இருவருக்கும் உணவு சமைத்துக் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று உணவு கொடுக்க முதியவர்கள் வீட்டிற்கு வந்தபொழுது வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ந்துபோன அவர் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தம்பதிகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக்கண்டு அவர் உடனடியாக மதுரவாயல் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.

 

Incident in chennai fear of being separated by Corona!

 

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் தம்பதியரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு நாட்களுக்கு முன்பு அஞ்சலாட்சிக்கு உடல்நிலையில் சரியில்லாததால் கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்ததும், கரோனா முடிவுக்காக காத்திருந்த நிலையில் ஒருவேளை கரோனா ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது; காவல்துறை விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Kalashetra Ex-Professor issue Police explanation

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதே சமயம் இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர். கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கைது சம்பவம் குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 1995 ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் திருவான்மியூர், கலாஷேத்ரா அறக்கட்டளையின் முன்னாள் மாணவிகள் இருவர் இந்த அறக்கட்டளையின் முன்னாள் ஆசிரியரான ஷீஜித் கிருஷ்ணா என்பவர் தங்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஷீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Kalashetra Ex-Professor issue Police explanation

இதனையடுத்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு இந்த வழக்கில் தொடர்புடைய சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஷீஜித் கிருஷ்ணா (வயது 51) நேற்று முன்தினம் (22.04.2024) கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.