
திண்டுக்கல் மாநகரிலுள்ள பாரதிபுரத்தில் இருக்கும் மாநகராட்சி அரசுப் பள்ளியில் புனரமைப்பு செய்யாமல் இருந்து வந்த மாநகராட்சி பள்ளி கடந்த ஆண்டு புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் நான்காம் வகுப்பறையின் கட்டிடத்தின் மேற் கூரை பெயர்ந்து விழுந்து ஐந்து மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. இதில் இரண்டு பேருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த மாணவர்களை உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விஷயம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கவனத்துக்குச் சென்ற உடனே உடனடியாக அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்த மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது மாணவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதோடு காயமடைந்த மாணவர்களுக்கு அமைச்சர் நிதி உதவியும் வழங்கினார். அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, “காயமடைந்த மாணவர்கள் நலமுடன் உள்ளனர். மேலும் இந்த விபத்திற்குக் காரணம் என்ன வென்று தீர விசாரணை செய்து தவறு நடந்திருந்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மாநகராட்சி பள்ளிகளுக்காகப் பள்ளி கட்டிடங்கள் கட்டவும் பழைய கட்டடங்களைப் பராமரிப்பு பணியைச் செய்யவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தரத்தைப் பற்றி புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி வராண்டாக்கள் கல்லூரி வளாகம் போல் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளிகளுக்கும் கட்டிடங்கள் கட்ட அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அப்போது மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.