Fire breaks out in school kitchen near Bhuvanagiri

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராக நத்தம் கிராமத்தில் 100-ஆண்டுகளை கடந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 120 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு புதன்கிழமை(9.4.2025) மதிய உணவு தயார் செய்வதற்காக பள்ளியின் அருகே உள்ள சமையலறையில் சமையலர்கள் சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக எரிவாயு உருளையில் தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதனால் பதற்றம் அடைந்த சமையலர்கள் சமையல் கூடத்தை விட்டு அலறி அடித்து வெளியே வந்தனர். உடனடியாக பள்ளியில் இருந்த மாணவர்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டு எரிவாயு நிறுவன ஊழியர்களுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த எரிவாயு நிறுவன ஊழியர்கள் சாதுரியமாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த எரிவாயு உருளையின் மீது சணல் சாக்கை தண்ணீரில் நனைத்து போட்டனர். தீ எரிவது குறைந்தது. இதனை அடுத்து குழாய் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து எரிவாயு உருளையின் வெப்பத்தை தனித்தனர்.

Advertisment

இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சமையல் எரிவாயு கூடத்தில் தீ ஏற்பட்ட காரணத்தை ஆய்வு செய்த பொழுது சிலிண்டர் ரப்பர் குழாய் சேதமடைந்து இருந்தது காணப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் சமையலரிடம் தரமான ரப்பர் குழாய்களை பயன்படுத்த வேண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை ரப்பர் குழாயை மாற்ற வேண்டும் என அறிவுறுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சாதூரியமாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.