கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் த.வெ.க.வினர் மற்றும் பா.ம.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் உருட்டுக்கட்டை மற்றும் கருங்கற்களால் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

த.வெ.க.வினர் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்குச் சென்றுள்ளனர். அப்போது பா.ம.க.வை சேர்ந்த நிர்வாகி பாலாஜி தகராறில் ஈடுபட்டதாக தவெகவினர் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அதன்படி போலீசார் இரு தரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றனர். இருப்பினும் இரு கட்சியினரும் சமரசம் அடையாமல் போலீசார் முன்னிலையிலேயே உருட்டுக்கட்டை மற்றும் கருங்கற்களைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக போலீசார் தரப்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் த.வெ.க நிர்வாகி விஜய் செல்வா என்பவருக்கும், பா.ம.க. நிர்வாகி பாலாஜிக்கும் இடையே ஏற்கனவே நிலத்தகராறு இருந்துள்ளது. இதுவே தற்போது இரு தரப்பினருக்கும் இடையேயான கட்சி மோதலாக மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.