கள்ளக்குறிச்சி அடுத்துள்ள ஏர்வாய்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் கடந்த 2024ஆம் ஆண்டு துபாய் நாட்டிற்குச் சுற்றுலா விசாவில் அனுப்பியுள்ளார். அதன்படி வெளிநாட்டிற்குச் சென்ற ஜெயபால் ஒரே மாதத்தில் உடல் நலன் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் ஜெயபால் சொந்த ஊருக்குத் திரும்பினார். இருப்பினும் ஜெயபால் 2 நாட்களில் உயிரிழந்தார். இது குறித்து வெளிநாட்டிற்கு அனுப்பிய விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கூறி ஜெயபாலின் மனைவி மலர் கச்சராப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இந்த புகார் மீது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஜெயபால் மனைவி மலர் இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் 2 மாதங்கள் ஆகியும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மலரின் உறவினரான இளைஞர் ஒருவர் கச்சராப்பாளையம் காவல்நிலையத்திற்கு கடந்த ஜூன் மாதம் சென்று ஆய்வாளரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கோபமடைந்த காவலர்கள் அவரை தாக்கியுள்ளனர்.இது தொடர்பான வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
இந்நிலையில் இளைஞரை தாக்கிய காவலரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேத் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை செய்திக்குறிப்பில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி உட்கோட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விக்கி என்கிற செந்தில்குமார் (தந்தை பெயர் :மலையன்) என்பவர் கடந்த 06.06.2025 அன்று கச்சிராயபாளையம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் இன்று (04.07.2025) வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக கச்சிராயபாளையம் காவல் நிலைய முதல் நிலை காவலர் மணிகண்டன் என்பவரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வில் தொடர்புடைய மற்ற காவலர்களின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.