
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பங்களா தெருவில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் பைப் லைன் அமைப்பதற்காக இயந்திரத்தின் மூலம் பைப்லைன் அமைப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பணியினை ஏழாவது வார்டு திமுக கவுன்சிலரின் கணவர் கோவிந்தன் செய்து வந்ததாக கூறப்படுகிறது, பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவர் திடீரென திமுக கவுன்சிலரின் கணவரான கோவிந்தனை அறிவாளால் வெட்டியுள்ளார்.
இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த திமுக கவுன்சிலரின் கணவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரமடைந்து சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் குற்றவாளியை கைது செய்யும் வரை சாலை மறியலில் கைவிடமாட்டோம் எனத் தொடர்ந்து சாலை மறியல் ஈடுபட்டு வந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரை சங்கராபுரம் எம்.எல்.ஏ திமுக மாவட்டச் செயலாளருமான உதயசூரியன் நேரில் சந்தித்து நடந்ததை விசாரித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் வெட்டியதாக கூறப்படும் வல்லரசு என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். சங்கராபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.