Incessant rain; Holiday notification for schools and colleges

Advertisment

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விடாது பெய்யும் தொடர் கனமழை காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (19.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும்பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் (19.12.2023) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இன்று (18-12-23) பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.