Advertisment

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை!

Incentives on behalf of the TN govt for the gold winners of the Chess Olympiad

ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்த்தில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இரண்டு பிரிவிலும் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோர் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றனர். இந்நிலையில் இந்த மூன்று வீரர்களும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (24.09.2024) அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மூன்று பேருக்கு தலா 25 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகையாகவும், அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணனுக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், என மொத்தம் 90 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார். மேலும், செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகளிடம் அடுத்து வரும் குளோபல் செஸ் லீக் போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, செஸ் விளையாட்டு வீரர். வீராங்கனைகளின் பெற்றோர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரியப் பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கும். மாணவ, மாணவியர்களுக்கும் சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை இந்திய வரலாற்றில் முதன் முறையாகத் தமிழ்நாட்டில், பல்லவர் காலச் சிற்பக் கலையினை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை மிகச் சிறப்புடன் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 185க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். மேலும். சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச அளவில் நடைபெறும் சதுரங்க போட்டிகளில் வெற்றி பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையினை தமிழ்நாடு அரசு வழங்கி சிறப்பித்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Praggnanandhaa gukesh vaishali hungery
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe