Skip to main content

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத் தொகை; முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Incentive amount with minimum supportive price for paddy Chief Minister M. K. Stalin's order

 

தமிழக விவசாயிகளின் நலன் கருதி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையினையும் சேர்த்து வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.

 

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் காரீப் பருவம் 2002 - 2003 முதல் மத்திய அரசின் முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்பட்டு மத்திய அரசின் தர நிர்ணயத்திற்குட்பட்டு நெல் கொள்முதல் செய்து வருகிறது. கடந்த 2022 - 2023 காரீப் கொள்முதல் பருவத்தில் கடந்த 21 ஆம் தேதி வரையில் 3526 எண்ணிக்கையிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 5 லட்சத்து 20 ஆயிரத்து 503 விவசாயிகளிடமிருந்து 43 லட்சத்து 84 ஆயிரத்து 226 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 9,414.58 கோடி விற்பனை தொகையாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2023 - 24 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

 

இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்குத் தேவையான அளவு விதைகள் மற்றும் உரங்கள் குறுவை தொகுப்பு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் நலன் கருதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  2023-2024 காரீப்  பருவத்திற்கான நெல் கொள்முதலினை வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மேற்கொள்ள மத்திய அரசை கேட்டுக்கொண்டதற்கிணங்க மத்திய அரசு தமிழ்நாட்டில் 2023-2024 காரீப் பருவத்திற்கான நெல் கொள்முதலினை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு  2023-2024  காரீப் பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,183/- என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,203/- என்றும் நிர்ணயித்துள்ளது.

 

Incentive amount with minimum supportive price for paddy Chief Minister M. K. Stalin's order

 

இந்நிலையில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் துயர்துடைத்து அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கோடும், கே.எம்.எஸ். 2023-2024 கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு 82 ரூபாயும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 107 ரூபாயும் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழக அரசின் நிதியிலிருந்து வழங்க ஆணை பிறப்பித்து அதன்படியே, தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,265  என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,310  என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகையினை 01.09.2023 முதல் வழங்கவும்  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்