Skip to main content

“வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நிகழ்வில் பா.ம.க. பங்கேற்கும்” - அன்புமணி

 

Inauguration of New Parliament; PMK participation

 

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து அதிமுக மற்றும் பாமக இந்நிகழ்வில் கலந்துகொள்வதாகத் தனித் தனியே அறிவித்துள்ளன. 

 

தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும்  இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.

 

கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28-ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. மேலும் நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், "புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" எனப் பதிவிட்டிருந்தார். நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவை புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்கும் என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது பாமகவும், புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்கும் எனத் தெரிவித்துள்ளது. 

 

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தில்லியில் வரும் 28 ஆம் நாள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பா.ம.க. கலந்து கொள்ளும்” எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !