
மலைவாழ் குறவர் சமூக பெண்ணிடம் கணவரை சேர்த்து வைப்பதாகக் கூறி 95 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் உதவியாளரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளார் திருச்சி சரக ஐ.ஜி.
நாகை மாவட்டம் திட்டச்சேரியைச் சேர்ந்தவர் உமா, மலைவாழ் குறவர் சமுகத்தைச் சேர்ந்த அந்த பெண், பிரிந்திருக்கும் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கவேண்டும் என நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளரான வேம்பு, "உன்னோட புருஷன் இப்ப எங்க இருக்காருன்னு தெரியும். எங்க இருந்தாலும் தூக்கிவந்து சேர்த்து வைக்கவேண்டியது என்னோட கடமை" என நம்பிக்கையோடு பேசி உமாவிடம் நெருக்கமாகி கொஞ்சம் கொஞ்சமாக உமாவிடம் பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளார்.
மூன்று மாதங்களாகியும் தனது கணவரைச் சேர்த்து வைக்காமல் லஞ்சமாக பணத்தை மட்டுமே வாங்குவதை நினைத்து வேதனை அடைந்து, இதற்கு முடிவுகட்ட நினைத்தார் உமா. இனிமேல் இதற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என நினைத்து எஸ்.ஐ பணம் கேட்கட்டும் அதனைத் தனது செல்போனில் பதிவு செய்து காவல் உயரதிகாரிகளுக்குப் புகாராக அளித்துவிடலாம் எனத் திட்டமிட்டார். உமாவின் கணக்குப்படியே எஸ்.ஐ. வேம்பு பணம் கேட்டுள்ளார். அதனை அப்படியே ரெக்கார்ட் செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார் உமா. அந்த புகாரை விசாரித்த திருச்சி மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், லஞ்சம் பெற்ற நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேம்புவை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
“மலைவாழ் குறவர் சமுதாயத்து மக்கள் சமீப காலமாக எந்தவித தொழிலும் நிரந்தரமாக இல்லாமல், தினசரி உணவுக்கே இரைதேடி ஓடும் பறவைகளைப்போல ஊர், ஊராகப் போகின்றனர். அவர்களிடம் மனசாட்சியே இல்லாமல் இரண்டு லட்சத்திற்கு மேல் பணம் வாங்கி ஏமாற்றிய காவலரை பணியிடை நீக்கம் செய்ததோடு மட்டுமில்லாமல் சிறையில் தள்ளியிருக்கனும், ஆனாலும் அந்த பெண்ணின் துணிச்சல் ரொம்பவே பாராட்டுக்குரியது” என்கிறார்கள் நாகை பகுதி சமுக ஆர்வலர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)