
நடப்பாண்டிற்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு நேற்று முன் தினம் (17-02-25) தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றும் இந்த கூட்டத்தொடரில், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மார்ச் 14ஆம் தேதியே தாக்கல் செய்யவுள்ளார்.
2025-2026 ஆண்டுக்கான முன்பணம் மானிய கோரிக்கை, கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை ஆகியவை மார்ச் மாதம் 21ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். இதற்கிடையே, மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மார்ச் 14ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி, பிப்ரவரி 25ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.