Important Announcement for Metro Rail Passengers

வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் 180 இடங்களில் கூடுதல் கண்காணிப்புகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் அதிக கனமழை எச்சரிக்கை காரணமாகச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15.10.2024) விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் கனமழை காரணமாக நாளை (15.10.2024) முதல் 3 நாட்களுக்கு ( 17.10.2024 வரை) கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கனமழை நேரத்தில் சென்னை மக்களுக்குத் தடையற்ற போக்குவரத்தை அளிக்கும் வகையில் கூடுதலாக மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

Important Announcement for Metro Rail Passengers

Advertisment

அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதாவது முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்குப் புறப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை, பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாகச் செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் மேற்கண்ட நாட்களில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பச்சை வழித்தடத்தில் இருந்து விமான நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோவில் மாறி விமான நிலையம் மெட்ரோவுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Important Announcement for Metro Rail Passengers

Advertisment

இருப்பினும், மேற்கூறிய அட்டவணைகள் அனைத்தும் வானிலை அறிவிப்பைப் பொறுத்து வழக்கமான சேவைக்கு மாற்றியமைக்கப்படும். முந்தைய அனுபவத்தின்படி, கனமழை காரணமாகத் தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்துமிடங்களில் (குறிப்பாக பரங்கிமலை மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ) பயணிகள் தங்கள் வாகனங்களை 15.10.2024 முதல் 17.10.2024 வரை நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தேவைப்பட்டால் வானிலை அறிவிப்பைப் பொறுத்து தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். எனவே மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.