Important Announcement for chennai Metro Rail Passengers from cmrl

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை (17.10.2024) அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. அதே சமயம் சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் சென்னைக்கான ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படும் என கருதப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் வானிலை ஆய்வு மையம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று (15.10.2024) அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வழக்கம் போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி வழக்கம்போல் இயக்கப்படும்.

Important Announcement for chennai Metro Rail Passengers from cmrl

Advertisment

பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும். அதாவது காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதன்படி முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும். கடைசி மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல்அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். எனவே மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் கனமழை காரணமாக நேற்று (15.10.2024) முதல் 3 நாட்களுக்கு (17.10.2024) வரை கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.