
தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,596 லிருந்து அதிகரித்து 1,631 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விடச் சற்று அதிகம். கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த ஒருநாள் தொற்று மூன்றாம் நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,58,197 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 174 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 186 என்று இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதேபோல் நேற்று கோவையில் 232 ஆக இருந்த பாதிப்பு இன்று 235 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,119 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,304 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,523 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,79,169 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 2 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை-235, ஈரோடு-137, செங்கல்பட்டு-133, திருவள்ளூர்-61, தஞ்சை-87, நாமக்கல்-53, சேலம்-54, திருச்சி-45, திருப்பூர்-113 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,600 ஐ தொட்டுள்ள நிலையில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் மருத்துவத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் வாயிலாக அறிவுறுத்தியுள்ளார். மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பூசி போடுவதைத் திட்டமிட்டுத் துரிதப்படுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும், கரோனா கண்டறியப்படும் நபருடன் தொடர்பிலிருந்த அனைவருக்கும் பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், 12ஆம் தேதி மெகா முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.