Impact on textile industry Chief Minister M. K. Stalin's letter to the Prime Minister

பருத்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளது குறித்தும், அதனால் நூல் மற்றும் ஜவுளி விலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (19.07.2023) கடிதம் எழுதியுள்ளார். அதில் குறு சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கீழ் செயல்படும் நூற்பாலைகளின் அவல நிலையைப் போக்கிடவும், நூற்பாலைத் துறையில் மீண்டும் வேலைவாய்ப்பினைக் கொண்டுவர உதவிடும் பொருட்டும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் நூற்பாலைத் தொழிலில் 15 இலட்சம் தொழிலாளர்களைக் கொண்டு 1,500 நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இவை தமிழ்நாட்டின் தொழில் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது. பருத்தி விலையில் ஏற்பட்டுள்ள கடுமையான விலை உயர்வு, வங்கி வட்டி உள்ளிட்ட செயல்பாட்டுச் செலவு அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுச்சந்தைகளில், தேவையில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவை நூற்பாலை சங்கம், ஜூலை 15, 2023 முதல் உற்பத்தி நிறுத்தத்தை அறிவிக்கும் அளவுக்கு, இத்துறையை ஒரு கடுமையான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் புதுப்பிக்கவும்,மறுசீரமைக்கவும் மத்திய அரசு அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ் (Emergency Credit Line Guarantee Scheme) குறுகிய காலக்கடன்களை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளதால் நூற்பாலைகளுக்குக் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதோடு உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது.

Advertisment

இந்தியாவில் பருத்தி இறக்குமதிக்கு மத்திய அரசால் விதிக்கப்படும் 11 விழுக்காடு இறக்குமதி வரி, இந்தியாவிற்கும், சர்வதேச அளவிலான போட்டியாளர்களுக்கும் இடையிலான மற்றொரு குறிப்பிடத்தக்க விலை வேறுபாடு ஆகும். இதுதொடர்பாக தனது 16-5-2022 நாளிட்ட முந்தைய கடிதத்தில், நூற்பாலைகள் பருத்தி கொள்முதல் செய்வதற்கான ரொக்கக் கடன் வரம்பை மூன்று மாதங்களில் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்கவும், வங்கிகள் கோரும் விளிம்புத் தொகையை கொள்முதல் மதிப்பில் 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கவும் கோரியிருந்தேன். ஜவுளித் தொழிலை (நூற்பு முதல் துணிகள் வரை) பாதுகாக்க வேண்டிய அவசியம், அதனால் உருவாகும் வேலைவாய்ப்புகளையும் கருத்தில்கொண்டு, தனது முந்தைய வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இந்தச் சூழலில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் கீழ் செயல்படும் நூற்பாலைகளின் அவல நிலையைப் போக்கிடவும், நூற்பாலைத் துறையில் மீண்டும் வேலைவாய்ப்பினைக் கொண்டுவரவும் உதவிடும் பொருட்டு, அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ், உரிய நிதியுதவியினை நூற்பாலைகளுக்கு வழங்கிடவும்,அந்நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தினை மேலும் ஓராண்டு நீட்டிக்கவும், ஏற்கனவே பெற்ற கடனை ஆறு ஆண்டு காலக் கடனாக மாற்றி திருத்தியமைத்திடவும், இத்திட்டத்தின் கீழ் புதிய கடன்கள் வழங்கிடவும், இக்கடன்களுக்கான வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்திடவும், பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, பருத்தி மீதான 11 விழுக்காடு இறக்குமதி வரியைத் திரும்பப் பெறவேண்டும். அதன்மூலம் உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைக்கலாம். மேலும், நாட்டின் நூல் உற்பத்தியில் குறுந்தொழில் நிறுவனங்களின் கீழ் வரும் கழிவுப் பஞ்சு நூற்பாலைகள் 35 விழுக்காடு அளவிற்குப் பங்களிக்கின்றன. குறைந்த விலை துணிகளில் பயன்படுத்தப்படும் இந்தக் கழிவுப் பருத்திப் பற்றாக்குறையை சமாளிக்க, இந்தியாவிலிருந்து கழிவுப் பருத்தியை ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்க வேண்டும்” என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.