
அழுக்குதேகம், கந்தலாடை, பரட்டைத் தலை என ஆதரவற்றவர்கள் பராரியாய் திரிவதையும் மனிதன் கடந்து வந்ததுண்டு. ஆனாலும் அவர்களில் ஒரு சிலர் மனிதநேயத்துடன் ஆதரவற்றவர்களை அணுகிப் பராமரிப்பது என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய சம்பவங்களே. அவர்களால் தான் மனிதநேயம் என்ற சொல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை பஸ் நிலையப் பகுதிகளில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மனநிலைபாதிக்கப்பட்டு நீண்ட தாடி, தலைமுடியுடன் அழுக்கேறிய கிழிந்த ஆடையுடன் மெலிந்த தேகமாய் பரிதாபமாய் அலைந்து திரிந்து கொண்டிருந்தார். நேற்றைய தினம் அந்த வழியாகச் சென்ற செங்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை டாக்டர் ராஜேஷ் கண்ணன், அந்த வாலிபரைப் பார்த்து பரிதாபப்பட்டவர், கண்கள் கசியவாஞ்சையுடன் அந்த வாலிபரிடம் பேசிஅவரைத் தன்னோடு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அங்கு அவருக்குவேண்டிய சுகாதாரவசதிகளைச் செய்தவர், அவரது தாடி, தலைமுடிகளைச் சீர் செய்துபுத்தாடைகள் அணிவித்து மருத்துவ சிகிச்சைகளை அளித்து வாலிபரின் கெட்டப்பையும் மாற்றி சராசரி மனிதனாக்கிப் பராமரித்து வருகிறார். அங்த வாலிபரைப் பற்றிய விபரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் செங்கோட்டை அரசு தலைமை மருத்துவரையோ அல்லது செங்கோட்டை காவல் நிலையத்தையோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்கிறார்கள்.
மனநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியான ஒருவரைமனிதாபிமானத்துடன் மீட்டு அவரை மனிதனாக்கியதுடன் அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வரும் மனிதநேய அரசு மருத்துவர் ராஜேஷ் கண்ணனைபொதுமக்கள் கொண்டாடுகின்றனர்.
Follow Us