Skip to main content

அழிந்த கிராமத்தின் அழியாத வரலாறு... கோடாங்கி சொன்ன குறியால் மனம் மகிழ்ந்த சேதுபதி மன்னர்!

Published on 15/11/2020 | Edited on 15/11/2020
The immortal history of the ruined village ... King Sethupathi who was delighted by the sign said by Kodangi!

 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் கருங்கலக்குறிச்சி அருகில் தற்போது பேச்சில்லா கிராமமாக உள்ள எருமைப்பட்டியைச் சேர்ந்த ஒரு கோடாங்கி சொன்ன குறியால் மனம் மகிழ்ந்த சேதுபதி மன்னர், அவருக்கு சிலை அமைத்து சிறப்பு செய்துள்ளார். அழிந்துபோன  எருமைப்பட்டியின் அழியாத வரலாறு பற்றி  கருங்கலக்குறிச்சியைச் சேர்ந்த முதுகலை தமிழாசிரியர் உ.சண்முகநாதன் கூறியதாவது,

மதுரை அழகர் கோவிலிலிருந்து ஒரு தம்பட்டம் மாட்டை (கோவில் மாடு) ஓட்டிக்கொண்டு ஊர் ஊராகப் பயணம் செய்து வந்த ஒரு முதியவர், ஒவ்வொரு வீட்டின் முன்பும் அழகர்மலை கோவிந்தனின் பெருமையைச் சொல்லி அருள்வாக்கும் கூறி வந்தார். பல ஊர்கள் பயணம் செய்த அவர் ஒருநாள் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகிலுள்ள எருமைப்பட்டிக்கு வந்து அருள்வாக்கு கூறினார்.

ஒரு பிரம்பை தரையில் ஊன்றி அதில் மாட்டின் கயிற்றை கட்டியிருந்தார். இரவு அவ்வூரில் தங்கியிருந்தவர் காலையில் வேறு ஊருக்குப் புறப்படும் நோக்கில், தரையில் ஊன்றிய பிரம்பை பிடுங்க முயல, முடியவில்லை. இறைவனை வேண்டி அருள் வந்து ஆடினார். இவ்வூர் மக்களைக் காக்க கோவிந்தன் வந்து இருப்பதாகக் கூறிய அவர் திடீரென காணாமல் போனார். இதை நேரில் பார்த்த அவ்வூர் மாயழகன் கோவிந்தனின் அருளால் குறி சொல்லும் கோடாங்கியானார்.

அப்போது ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. சேதுநாட்டின் கோடாங்கிகள் பலரை அழைத்து பரிகாரம் கேட்டபோது, யாருக்கும் சரியாக கணிக்கத் தெரியவில்லை. அரண்மனை மருத்துவனின் கோரிக்கை படி கோடாங்கி மாயழகனை மன்னர் ராமநாதபுரம் அரண்மனைக்கு அழைத்திருந்தார். அங்கு தரையில் அமர்ந்து இரண்டு, மூன்று முறை உருட்டிய  சோவிகள் அவருக்கு சேதி சொன்னது. ராணிக்கு வந்த நோயைச் சொல்லி, நோய்க்கு மருந்தும் சொல்லி, குறியும் சொல்லி முடித்து திருநீறை அள்ளிக் கொடுத்து ராணிக்குப் பூசச் சொன்னார் கோடாங்கி.

திருநீறைப் பூசிய சில நொடிகளில் ராணி எழுந்து நடந்தாள். மனம் மகிழ்ந்த சேதுபதி ராஜா, கோடாங்கி மாயழகனிடம் “உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க சாமி” என்றார். “நீங்க நல்லா இருந்தா போதும் ராஜா. எனக்கு எதுவும் வேண்டாம்” என ஆசி கூறி அங்கிருந்து கிளம்பினார். சில நாட்களுக்குப் பின் எருமைப்பட்டிக்கு வந்த சேதுபதி ராஜா, அங்கு ஒரு சிறிய கோயிலை எழுப்பி, மரத்தாலான கோவிந்தன் சிலையை  அமைத்து வழிபட்டார். கோடாங்கி மாயழகன் காலத்துக்குப் பின் அவருக்கு கருங்கல்லால் சிலை வைத்து தன் நன்றிக்கடனை செலுத்தினார் சேதுபதி ராஜா. இவ்வாறு அவர் கூறினார்.

இக்கோயிலை நேரில் ஆய்வு செய்த ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது,

தேக்கு மரத்தாலான கோவிந்தன் சிற்பம் 2 அடி உயரமும், ¾ அடி அகலமும் உள்ளது. காலைத் தூக்கிய நிலையில் உள்ள குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் கோவிந்தன் சிற்பம் இருபுறமும் நம்மைப் பார்ப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. கோடாங்கி மாயழகனின் கற்சிற்பம் கொண்டையிட்ட தலையுடனும் கும்பிட்ட கைகளுடனும் காணப்படுகிறது. கருங்கலக்குறிச்சி என்ற ஊருக்கு அருகில் இருந்த எருமைப்பட்டி தற்போது பேச்சில்லா கிராமமாக உள்ளது. இவ்வரலாற்றுக்குச் சான்றாக உள்ள கோயிலும், கோவிந்தன், கோடாங்கி ஆகியோர் சிற்பங்களும் 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இதேபோன்ற கோவிந்தன் கோயில் திருப்புல்லாணி அருகில் பள்ளபச்சேரியில் உள்ளது. இவ்வாறு  அவர் கூறினார்.

இடிந்துவிட்ட கோயிலும், அழியாத மரச்சிற்பமும், கைகூப்பி நிற்கும் கோடாங்கி மாயழகனின் கற்சிற்பமும், சேதுபதி ராஜாவையும் வரலாற்று நிகழ்வையும் நினைவு படுத்தும் ஆதாரமாக இன்றும் விளங்குகின்றன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
1000 year old Mahavira sculpture discovered

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மணவராயனேந்தலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கி.பி.11ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி பகுதியில் கள ஆய்வின் போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் இருப்பதை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சு. ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் மீ. சரத் ராம் ஆகியோர் கண்டுபிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, ஆய்வாளர் நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு கூறியதாவது, ‘விருதுநகர் மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குறண்டி, இருஞ்சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகரநல்லூர், சேத்தூர், சென்னிலைக்குடி, கீழ் இடையன்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்ட இடங்களில் சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மணவராயனேந்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இச்சிற்பத்தில் மகரத் தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்திய விநோதம், சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் அநேக இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இவை ஆதாரமாக உள்ளன. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இச்சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாக’ அவர் தெரிவித்தார்.

Next Story

உலகப் பாரம்பரிய வார விழா; தொன்மைப் பொருட்கள் கண்காட்சி

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து நடத்திய உலக பாரம்பரிய வார விழாக் கொண்டாட்டம் 2023 தொன்மைப் பொருட்கள் கண்காட்சி சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் சிவகங்கை தொல்நடைக் குழுவின் தலைவரும் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான நா. சுந்தரராஜன்  தலைமை வகித்தார், சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் சு. காளீஸ்வரன் வந்தோரை வரவேற்றார். சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா நோக்க உரையாற்றினார். சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி தொல்நடைக் குழு பெருமைமிகு வழிகாட்டி செ. கண்ணப்பன் முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்  (பொறுப்பு) திருமதி ஜெயமணி அவர்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தும் போது, மரபு நீட்சியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அடுத்த அடுத்த தலைமுறைக்கு பண்பாட்டையும் மரபையும் பாதுகாக்க முடியும் சிவகங்கையில் உலகப் பாரம்பரிய வார விழா கொண்டாடுவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.

 

சிவகங்கை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர், சிவகங்கை மகளிர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனீஸ்வரன், காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி மேனாள் முதல்வர் வள்ளி, பள்ளி ஆய்வாளர் இராதா கிருஷ்ணன்,சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் வித்தியா கணபதி ஆகியோர் வாழ்த்துரைத்தனர். சிவகங்கை தொல்நடைக்குழு செயலர் இரா.நரசிம்மன் நன்றியுரைத்தார்.

 

இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து மூன்று ஆண்டுகளாக உலகப் பாரம்பரிய விழாவை கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்தரங்க நிகழ்வாக நடைபெற்ற உலக பாரம்பரிய வார விழா இந்த ஆண்டு கண்காட்சியாக நடத்தப்பட்டது.

 

இந்த ஆண்டு நடைபெற்ற இக்கண்காட்சியில் 600 க்கு மேற்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சிவகங்கை தொல்நடைக் குழுவினர், அவ்வப்போது மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் கிடைத்த பொருள்களை காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவகங்கை சுற்றுப்பகுதியில் கிடைத்த இரும்பு உருக்கு ஆலை எச்சங்கள், மண்ணால் ஆன குழாய்கள், இரும்புக் கழிவுகள் காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கிடைத்த தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடு,எலும்பு முனைக்கருவி, பானையோட்டுக் குறியீடுகள், சங்க கால செங்கல் மற்றும் மேற்கூரை ஓட்டு எச்சங்கள், வட்டச் சில்லுகள், ராஜராஜ சோழன்  பீஜப்பூர் சுல்தான் நாணயங்கள் உட்பட பழமையான நாணயங்களும் இருந்தது.

 

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக இணைச்செயலர் பீர்முகமது அவர்களது பத்தாண்டு கால சேகரிப்பில் உள்ள கலைநயமிக்க வெண்கலப் பொருள்கள், மரப் பொருள்கள், கத்திகள், வாள்கள், பழமையான செட்டிநாட்டு புழங்கு பொருட்கள், உரல் உலக்கை பழமையான கண்ணாடிப் பொருட்கள், இன்றைய பயன்பாட்டில் இல்லாத பழமையான மின்சாதன பொருட்கள், பலதரப்பட்ட தொலைக்காட்சிகள் பல வகையான வானொலிகள் முதலியவற்றுடன்  மௌண்ட் லிட்ரா பள்ளி மாணவர்கள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய பனையோலைகள் பழமையான விளக்குகள் மற்றும் மன்னர் பள்ளி மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வளரி, வாள் பழமையான மின்சாதன பொருட்கள், விளக்குகள் ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் காட்சிப் படுத்தப் பெற்றிருந்தன.

 

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தொல்நடைக் குழு வைச்சேர்ந்த பொருளர் பிரபாகரன், இணைச் செயலர் முத்துக்குமார், சரவணன்,பாலமுருகன், அலெக்ஸ் பாண்டியன், முத்துக் காமாட்சி, மீனாள், மற்றும் மன்னர் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள் பர்வத ரோகிணி, பழனிவேல் முருகன், தனலட்சுமி காந்தி அழகப்பன், வெங்கட கிரி,பிரசாத், மனோகரன் ஆகியோர்  செய்திருந்தனர். சிவகங்கை மன்னர்  கல்வி நிறுவனங்கள்  மற்றும் சிவகங்கை நகரைச் சுற்றியுள்ள பள்ளிகள் என மூவாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தொன்மைப் பொருட்கள் கண்காட்சியை கண்டு களித்தனர்.