Skip to main content

"போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனே போனஸ்....."- ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்! 

Published on 09/10/2022 | Edited on 09/10/2022

 

"Immediate bonus for transport workers...."- Aam Aadmi Party insistence!

 

ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத்தின் இணைச் செயலாளர் சுதா இன்று (09/10/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு.போனஸ் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான போனஸ் தொடர்பாக, இதுவரை பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இந்த ஆண்டு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சுமார் 1,25,000 ம் தொழிலாளர்களும் எதிர்ப்பார்த்து இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்கவில்லை. மேலும் தீபாவளி பண்டிகை வர இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனே போனஸ் வழங்கினால், அவர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவார்கள். 

 

போக்குவரத்து என்பது பொதுமக்கள் சேவை என்பதால் போக்குவரத்து கழக ஊழியர்கள் மழை, வெயில்   மற்றும் பனி காலங்களிலும் பேருந்துகள் அனைத்தும் முழுமையாக இயக்கி வருகிறார்கள். மேலும் மகளிருக்கான பேருந்து பயண இலவச பயணதிட்டத்தின் மூலம் தமிழக பெண்கள் பேருந்து போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் போன்றோர்களுக்கு தீபாவளி போனஸ் தொழிற்தகராறு சட்டம் 1947 படியும், போனஸ் சட்டம் 1965  படி போனஸ்  8.33 விழுக்காடு கருணைத் தொகை 11.67 விழுக்காடு என மொத்தம் 20 சதவீதம் குறையாமல்   போனஸ் வழங்க வேண்டும்.

 

மேலும், கடந்த ஆண்டு போனஸ் 10% மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இது சம்மந்தமாக தொழிற்தாவா சட்டப்படி 20% சதவிதற்கு குறைவாக போனஸ் வழங்கப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் போக்குவரத்து பிரிவு சங்கம் SVS தொழிற்சங்கம் சார்பாக தொழிலாளர் ஆணையத்தில் தொழிற்தாவா தொடுக்கப்பட்டு இன்னும் நிலுவையில் உள்ளது. ஆகவே இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் 20% சதவிதத்திற்கு குறைமால் வழங்க வேண்டும்" என்று தமிழக அரசைக் கேட்டு கொள்கிறோம்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.