
பத்திரப்பதிவு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் பிரத்யேக புகார் மையம் அமைக்கப்படும் என மதுரையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை திருமலைநாயக்கர் மஹால் அருகேயுள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். தற்போது கரோனா காலம் என்பதால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பத்திரப்பதிவு முறை நடைபெறுகிறதா என்பது குறித்தும் முறைகேடுகள் குறித்தும் ஆய்வு நடத்திய அமைச்சர், பின்னர் பத்திரப்பதிவு செய்யவந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “பத்திரப் பதிவில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பத்திரப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. பத்திரப்பதிவுத்துறையில் சிறு தவறுகள் நடந்தாலும் உடனே சரி செய்யப்படும். கடந்த காலம்போல் அல்லாமல், பத்திரப் பதிவு எளிமையான முறையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் உரிய கட்டணம் பெற்று பத்திரப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலித்து, பத்திரப்பதிவு அலுவலகங்களில் முறைகேடு நடப்பதாக புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரப்பதிவு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் பிரத்யேக புகார் மையம் அமைக்கப்படும். வணிக வரித்துறையில் அலுவலகமே இல்லாமல் தவறாகப் பதிவு செய்துகொண்டு செயல்படும் நிறுவனங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தார்.