Skip to main content

‘நாங்க பிரஸ்...’ திருச்சியை மிரட்டும் 20 பேர் கும்பல்! 

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

'I'm Press..' 20 people gang in Trichy!

 

திருச்சியில் ஒரு இருபது பேர் கொண்ட கும்பல், தங்களைப் பிரஸ், ரிப்போர்ட்டர், செய்தியாளர் என்று கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மிரட்டியும், வசூல் செய்தும் வருவதாக தொடர்க் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

 

இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நம்மிடம் பேசியபோது, ‘நான் பிரஸ், நான் ரிப்போர்ட்டர், நான் செய்தியாளர்’ எனும் இந்த வார்த்தைக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாகச் சிலர் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இன்றைய நவீன டிஜிட்டல் உலகத்தில் அனைவரும் தனக்கெனச் சொந்தமாக ஒரு தளம் அல்லது ஒரு யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கிக் கொண்டு, ‘நானும் ரிப்போர்ட்டர், செய்தியாளர், பிரஸ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கீகரிக்கப்பட்ட செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணி புரியும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகச் செய்தியாளர்களுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. 

 

கடந்த சில தினங்களாகத் திருச்சியில் நடைபெறும் கட்சி மற்றும் அமைப்பு சார்ந்த ஆலோசனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், பாராட்டு விழாக்கள், கண்காட்சி மற்றும் நிறுவனத் திறப்பு விழாக்கள் போன்ற எது நடந்தாலும் அங்கு உள்ளே புகுந்து, ‘ரிப்போர்ட்டர்ஸ் ஒரு 20 பேர் வந்து இருக்கோம்’ அப்படின்னு சொல்லி மிரட்டிப் பணம் வசூல் செய்கின்றனர்.

 

‘நிகழ்ச்சிக்கு உங்களை நாங்கள் அழைக்கவில்லையே, பின்னர் எதற்காக நீங்கள் வருகிறீர்கள்; இவ்ளோ பேரு நீங்க எதுல இருக்கீங்க’ என்று கேட்டால் அதற்கும் பதில் சொல்லாமல் பணம் மட்டும் கேட்டு மிரட்டுகிறார்கள். பணம் கொடுக்கவில்லை என்றால் திட்டி விட்டு என்னைப் பற்றி தவறாகச் செய்தி போடுவோம் எனவும் மிரட்டி விட்டுச் செல்கின்றனர். இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான என்னைப் போன்று பலர் மிகுந்த மன வேதனை அடைந்து வருகின்றோம்.

 

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகரக் காவல் துறை இதனை கட்டுப்படுத்திச் செய்தியாளர்கள் என்கிற போர்வையில் உலா வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்