
திருச்சி துவாக்குடியில் உள்ள அரசு மதுபானக் கிடங்கில் சட்ட விரோத மதுவிற்பனையைத் தடுப்பது குறித்தும் அரசு மதுபான விற்பனையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் தஞ்சையில் கள்ளச் சந்தையில் அரசு மதுபானங்களை வாங்கி குடித்தவர்கள் இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இதனால் தமிழக அரசு தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனையைத் தடுப்பதுடன் அரசு மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தமிழக காவல்துறையினரும் மதுவிலக்கு பிரிவு போலீசாரும் தீவிரமாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் கள்ளச்சந்தையில் அரசு மதுபானங்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் துவாக்குடியில் உள்ள அரசு மதுபான குடோனில் சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் விற்கப்படும் மதுபான விற்பனையைத் தடுப்பது குறித்தும் அரசு மதுபான விற்பனையை அதிகரிப்பது குறித்தும் அரசு டாஸ்மார்க் சூப்பர்வைசர்களுடன் நடந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு திருச்சி மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். திருவெறும்பூர் அரசு மதுபான கிழக்கு மேலாளர் ராஜ்குமார், திருச்சி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வசுமதி, திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் அரசு மதுபானங்களை கடையிலிருந்து சட்ட விரோதமாக வெளிச் சந்தையில் அதிக விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டும். மேலும் அரசு மதுபானக் கடையிலேயே உள்ள சரக்குகளின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். அதேபோல் அரசு அனுமதித்துள்ள நேரத்திற்கு முன்பும் பின்பும் விற்கக்கூடாது. அதேபோல் ஒரு நபருக்கு நான்கு பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்பது குறித்து அரசு மதுபானக் கடை சூப்பர்வைசர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.