/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2804.jpg)
திருச்சியில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்ணை அவரின் ஆண் நண்பரே கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தானும் இரயில் முன் படுத்து தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை, நாகம்மை வீதி விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா (31, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி ஏழு வயதில் ஒரு மகன் உள்ளார். அதே பகுதி மேலகல்கண்டார் கோட்டை பழைய அய்யனார் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் வினோத்குமார் (36). இவர் ஒரு தனியார் வங்கியில் பணி செய்துவந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வினோத்குமாருக்கும், மஞ்சுளாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துவந்துள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை மஞ்சுளாவின் வீட்டிற்கு வங்கி ஊழியர் வினோத்குமார் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், மஞ்சுளாவை கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். அங்கிருந்து தப்பி ஓடிய வினோத்குமார், பழைய மஞ்சள் திடல் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அப்போது தஞ்சையில் இருந்து திருச்சிக்கு ரயில்வே ஊழியர்கள், பணியாளர்களை ஏற்றி வந்த ரயில் அவர் மீது ஏறியுள்ளது. இதில் வினோத்குமார் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை துணை கமிஷனர் ஸ்ரீதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மோப்பநாய் பொன்னியுடன் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)