Skip to main content

சந்தேகத் தீயால் நிலைகுலைந்த குடும்பம்: மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன்!

Published on 15/04/2022 | Edited on 15/04/2022

 

salem


ஆத்தூர் அருகே, மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த கொடூர கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (40). அப்பகுதியில் சில்லி சிக்கன் கடை வைத்திருக்கிறார். இவருடைய மனைவி சசிகலா (38). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். சசிகலா, பி.எஸ்சி., பி.எட்., படித்திருக்கிறார். டெட் தேர்வு எழுதுவதற்காக கடந்த சில மாதங்களாக தனியார் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார்.

 

கடந்த சில நாள்களாக அவர், செல்போனில் யாரிடமோ நீண்ட நேரம் பேசி வந்துள்ளார். மனைவியின் போக்கில் மாற்றத்தைக் கண்ட ஜெயக்குமாருக்கு, அவருடைய நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப். 12) மதியம் 3 மணியளவில், சசிகலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, ஜெயக்குமார் மனைவியின் சடலத்தை காரில் எடுத்துக்கொண்டு மாமியார் ஊரான கோவிந்தராஜபாளையத்திற்குச் சென்றார். அப்போது மாமியார் வீட்டில் இல்லாததால், சசிகலாவின் சடலத்தை வீட்டு வாசலில் ஒரு கட்டிலில் கிடத்தி, அதன் அருகில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் வெளியூர் சென்றிருந்த சசிகலாவின் தாயார் குப்பாயிக்கு தகவல் அளித்தனர்.  

 

அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்கு வந்தார். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை ஜெயக்குமார்தான் கொலை செய்துவிட்டு நாடகமாடுவதாகவும் ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பரபரப்புக்கு இடையே ஜெயக்குமார் திடீரென்று மாயமானார். காவல்துறையினர் சசிகலா மரண வழக்கை, சந்தேக மரண வழக்காக பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர்.

 

உடற்கூராய்வு முடிந்து, சசிகலாவின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்றபோது, சாவிற்குக் காரணமான ஜெயக்குமாரை கைது செய்யக்கோரி குப்பாயி மற்றும் உறவினர்கள் திடீரென்று மருத்துவமனை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர், உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பிறகு, அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட உறவினர்கள், சடலத்தைப் பெற்றுக்கொண்டுடனர்.  

 

இந்த களேபரத்திற்கு இடையே ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டது, காவல்துறைக்கு அவர் மீது சந்தேகத்தை வலுக்கச் செய்தது. தீவிர தேடுதலில் அவர், கோவிந்தராஜபாளையத்திலேயே உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. உடனடியாக ஜெயக்குமாரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 

அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஜெயக்குமாரும், சசிகலாவும் அரசுக்கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்கள் வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டனர். காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் கூட, திருமணம் ஆன ஒரு மாதத்திலேயே அவர்களுக்குள் காதல் கசந்து, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது சசிகலா, வெளி ஆண்கள் யாரிடமாவது சகஜமாக சிரித்துப் பேசினாலோ, செல்போனில் நீண்ட நேரமாக பேசினாலோ அதை கடுமையாக கண்டித்து வந்துள்ளார் ஜெயக்குமார். இதனால் அவர்களுக்குள் மேலும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில்தான், ஏப். 12ம் தேதியன்றும், மனைவியின் நடத்தை தொடர்பாக ஜெயக்குமார் கேள்வி எழுப்ப, அவர்களுக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார், வீட்டில் கிடந்த ஒரு கயிற்றை எடுத்து சசிகலாவை கழுத்தை இறுக்கிக் கொலை செய்திருக்கிறார்.இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் தன்னை காவல்துறை கைது செய்து விடும் என்று அஞ்சிய ஜெயக்குமார், தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக சித்தரிக்க முயன்றுள்ளார். அதற்காக அவர், மனைவியின் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

மனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தால் அவரை கொலை செய்து விட்டதாக ஜெயக்குமார் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் விநாயகபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்