
கள்ளத் துப்பாக்கி தயாரிப்பதிலும் பெயர் போனதா கல்வராயன் மலை? இருவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள இன்னாடு ஊராட்சிக்குட்பட்ட மேல்நிலவூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் உள்ளிட்டோர் கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கி தயாரித்து, விற்பனை செய்து வந்ததாக, கரியாலூர் காவல் நிலையப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்குச் சென்று தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அப்போது, இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், துப்பாக்கி தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள், அதற்கான மூலப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்து, பறிமுதல் செய்த போலீசார், கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்த குமார் உள்ளிட்ட இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
கைதானவர்களை காவல் நிலையத்தில் வைத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தீவிரவாதத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெரால்டு ராபின்சனும் விசாரணை நடத்தி வருகிறார்.இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.