Illegal cutting of trees in Yercaud; Forest department officer dismissal!

ஏற்காடு வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக மரங்களை வெட்டி அழிக்க உடந்தையாக இருந்த வனத்துறை அலுவலரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

சேலம் மாவட்டம், சேர்வராயன் வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஏற்காடு வனப்பகுதியில் அகரம் என்ற மலைக்கிராமம் உள்ளது. இந்த ஊரில் இருந்து குப்பனூர் முதல் ஏற்காடு முதன்மைச் சாலை வரை செல்வதற்கு வசதியாக 2.50 கி.மீ. தூரத்திற்கு வனப்பகுதிக்குள் புதிய சாலை அமைக்க அகரம் மலைக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

Advertisment

இந்த சாலை அமைக்க அரசு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. ஆனால், மலைக்கிராம மக்கள் அறியாமையில், சாலை அமைய உள்ள பகுதிகளில் இருந்த மரங்களை வெற்றி அகற்றியுள்ளனர். இதற்கு வனத்துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்நிலையில், வனத்துறை அனுமதியின்றி மரங்களை வெட்டியதாக புகார்கள் கிளம்பியது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம், உதவி வனப்பாதுகாவலர் கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில், மலைக்கிராம மக்கள் சட்ட விரோதமாக வனப்பகுதியில் சாலை அமைக்க முயன்றதும், அதற்காக அனுமதியின்றி 200 மரங்களை வெட்டி வீழ்த்தி இருப்பதும் தெரியவந்தது. வனக்காப்பாளர் குமார் என்பவர், மலைக்கிராம மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மரங்களை வெட்ட அனுமதித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வனச்சரகர் பரசுராமமூர்த்தி, வனவர் சென்னகிருஷ்ணன் ஆகியோர் மரங்கள் வெட்டப்படுவது தெரிந்து இருந்தும் அதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் வனத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.