ADVERTISEMENT

'இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க முடியாது!' - பிரசாத் ஸ்டுடியோ!

04:33 PM Dec 21, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள பொருட்களை எடுக்க, இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க இயலாது என பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவின் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா, கடந்த 40 ஆண்டுகளாக தன்னுடைய ரிக்கார்டிங் தியேட்டராகப் பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 2019- ஆம் ஆண்டு பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம், அவ்விடத்தை வேறு தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும், இளையராஜாவை அந்த இடத்திலிருந்து காலி செய்துகொள்ளுமாறும் வலியுறுத்தியது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அது தொடர்பான வழக்கு, தற்போது சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில்தான், இத்தனை ஆண்டுகள் இசையமைத்த அந்த ஸ்டூடியோவுக்குச் சென்று, ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும். அங்கு, தான் கைப்பட எழுதி வைத்துள்ள இசைக் கோப்புகள், இசைக் கருவிகள், தனக்குக் கிடைத்த அவார்டுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள அனுமதிக்குமாறு, ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி, இளையராஜா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

எதிரியையும் உபசரிக்கும் பண்பு கொண்ட தமிழ் மண்ணில், ஸ்டுடியோ இடத்தில் இளையராஜாவிற்கு உரிமை உள்ளதா, இல்லையா என்பதைத் தாண்டி, மனிதாபிமான அடிப்படையிலும், நீண்ட நாள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், ஏன் இசையமைப்பாளர் இளையராஜாவை ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, அது குறித்து ஸ்டூடியோ நிர்வாகத்திடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள பொருட்களை எடுக்க இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க இயலாது. ஆனால், அவரது பொருட்களை அவரது பிரதிநிதிகள் யாரேனும் வந்து எடுத்துச் செல்ல ஆட்சேபனை இல்லை என்று பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் நீதிபதிகள், நீதிமன்றம் சார்பாக ஒரு வழக்கறிஞரை ஆணையராக நியமித்து அவருடன் இளையராஜா தரப்பும், பிரசாத் ஸ்டுடியோ தரப்பும் பேசி முடிவெடுக்கத் தயரா எனக் கேள்வி எழுப்பி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT