சென்னை ஐஐடியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் என்ற மாணவர் இன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்ததகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூர்புரம் போலீசார் மாணவர் புஷ்பக் ஸ்ரீ சாய் உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் சென்னை ஐஐடியில் எம்.எஸ். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஸ்டீவன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், தற்போது அடுத்த மாதமே மீண்டும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் தரப்பில் இருந்து, “பொருளாதாரம், குடும்பப் பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க முடிவதில்லை” என்றுவிளக்கம் தரப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.