


தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (07.03.2025) மாலை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது. அதாவது இன்று மாலை சரியாக 06.24 மணிக்கு நோன்பு திறக்கப்பட உள்ளது. மக்ஃரிப் பாங்கு மாலை மணி 06.28 மணிக்கு நடைபெற உள்ளது. மக்ஃரிப் தொழுகை மாலை 06.35 மணிக்கு நடைபெற உள்ளது. மக்ஃரிப் தொழுகை முடிந்ததும் கட்சியின் சார்பில் இஃப்தார் விருந்து நடைபெற உள்ளது.
இதில் அக்கட்சித் தலைவர் விஜய், இஸ்லாமியர்களோடு கலந்துகொண்டு உள்ளார். இந்நிலையில் சுமார் 2 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் மட்டன் பிரியாணி மற்றும் நோன்புக் கஞ்சி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு அக்கட்சித் தலைவர் விஜய் வந்துள்ளார். இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடக்கவுள்ள இடத்தில் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் கூட்ட நெரிசல் நெரிசல் ஏற்பட்டது. மேலும் விஜய்யைக் காண ஏராளமானோர் அங்குத் திரண்டதால் அரங்கின் கதவு உடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.