Advertisment

''தப்பு செய்தால் தெருவை கூட்டணும்!''; அரசுப்பள்ளி மாணவிகளுக்கு நூதன தண்டனை!!

s s

சேலம் அருகே, வகுப்பறையில் குப்பை போடும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு தெரு கூட்டும் நூதன தண்டனை வழங்கப்படுவதால் அப்பகுதி மக்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisment

சேலத்தை அடுத்த ராமலிங்கபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ராமலிங்கபுரம், சின்னகவுண்டாபுரம், பெரியகவுண்டாபுரம், ஏரிக்காடு, ராம்நகர், பாப்பநாயக்கன்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். 6 முதல் 10ம் வகுப்பு வரை 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆறாம் வகுப்பிற்கு மட்டும் வழக்கமான தமிழ் வழி மட்டுமின்றி, ஆங்கில வழியிலும் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

Advertisment

இந்தப் பள்ளியில், வகுப்பறையில் குப்பை போடும் மாணவ, மாணவிகளுக்கு தெருவை கூட்டி சுத்தப்படுத்தும் நூதன தண்டனையை ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

tr

இதுகுறித்து ராமலிங்கபுரம் மக்கள் கூறுகையில், ''ராமலிங்கபுரம் சுற்றுவட்டார கிராம மக்களே ஒன்று சேர்ந்து சொந்த செலவில் இந்தப்பள்ளியை 1964ம் ஆண்டில் கட்டிக்கொடுத்தனர். ஆரம்பத்தில் துவக்கப்பள்ளியாக மட்டுமே இயங்கி வந்தது. பின்னர் நடுநிலைப்பள்ளியாகவும், அதன்பின்னர் 2012ம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

ஓரளவு மாணவர் சேர்க்கை உள்ள நிலையில், போதிய எண்ணிக்கையில் கழிப்பறைகள் இல்லை. இதனால், தினமும் காலை, மாலை வேளைகளில் மாணவ, மாணவிகள் அவசர உபாதைகளைக் கழிக்க, ரேஷன் கடையில் வரிசையில் நிற்பதுபோல் காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

அதுமட்டுமின்றி, பள்ளிகளில் வராண்டா, வகுப்பறைகளை கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்தும் வேலைகளில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தக்கூடாது என்ற அரசு உத்தரவும், இந்தப் பள்ளியில் மீறப்படுகிறது. வகுப்பறைகளில் யாராவது குப்பை போட்டால் அதை சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை துடைப்பத்தால் கூட்டி சுத்தப்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களே தண்டனை வழங்குகின்றனர்.

இந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசாங்க சம்பளம் பெறுகிறார்களே தவிர, அவர்களின் பிள்ளைகளை இப்பள்ளியில் படிக்க வைப்பதில்லை. அவர்களின் பிள்ளைகள் இங்கு படித்தால், இப்படி தெருவையும், வகுப்பறைகளையும் கூட்டச் சொல்வார்களா?,'' என்றனர்.

sw

ராமலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி, பொதுத்தேர்வுகளில் ஒருமுறை 100 சதவீத தேர்ச்சியும், அதன்பிறகு தொடர்ந்து 95 சதவீதத்திற்கு மேலும் தேர்ச்சி பெற்று வருகிறது. பயிற்றுவிப்பதில் முன்னணியில் இருந்தாலும், மாணவிகளை தெருவில் இறங்கி துப்புரவு பணிகளைச் செய்ய வைப்பது போன்ற பிரச்னைகளுக்கு ஆசிரியர்களே காரணமாக இருப்பதற்கு பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லாததால் சுழற்சி முறையில் 6 முதல் 9ம் வகுப்பு வரை ஏதேனும் ஒரு வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வெட்டவெளியில் மரத்தடியில் அமர வைத்து பாடம் நடத்துகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அரசுப்பள்ளிகளை நோக்கி மாணவர்களை எப்படி ஈர்க்க முடியும்? என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுபற்றி ராமலிங்கபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முடியரசனிடம் கேட்டோம்.

''சார்... பள்ளியை பெருக்கிச் சுத்தப்படுத்துவதற்காக துப்புரவு பணியாளர்களை நியமித்து இருக்கிறோம். பள்ளி இடைவேளையின்போது மாணவ, மாணவிகள் அருகில் உள்ள கடைகளில் சென்று பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி வருகின்றனர். அவர்கள் வகுப்பறைக்குள் உட்கார்ந்து கொண்டே சாப்பிட்டுவிட்டு, அதன் காகித உறைகள், குப்பைகளை ஜன்னல் வழியாக தெருவில் வீசுகின்றனர். தவறை உணர்த்துவதற்காக குப்பை போட்டவர்களையே ஆசிரியர்கள் கூட்டச் சொல்லியிருப்பார்கள். அதுவும் தவறுதான். யார் என்ன என்று விசாரிக்கிறேன்.

6 முதல் 10ம் வகுப்பு வரை ஐந்து வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. ஆறாம் வகுப்பில் ஆங்கில வழியில் ஒரு பிரிவு செயல்படுவதால் ஒரு வகுப்பைறைக்கு தட்டுப்பாடு உள்ளது. அதனால், சுழற்சி முறையில் தினமும் ஏதாவது ஒரு வகுப்புப் பிள்ளைகளை மரத்தடியில் அமர வைத்து பாடம் சொல்லித் தருகிறோம்.

ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ், இந்தப் பள்ளிக்கு பெரியகவுண்டாபுரத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், எட்டு வழிச்சாலைத் திட்டத்தால் இந்தப் பள்ளிக்கூடமும் இடிக்கப்பட உள்ளது. அதனால் வரும் கல்வி ஆண்டுக்குள் புதிய கட்டடத்திற்கு இந்தப் பள்ளி இடமாற்றம் செய்யப்படும். அங்கு போதிய வசதிகள் உள்ளன,'' என்கிறார் முடியரசன்.

மாணவ, மாணவிகளின் தவறை உணரச் செய்வதற்கு அவர்களை தெருவைக் கூட்டச் சொல்வதைவிட, வீட்டுப்பாடங்களை 100 முறை 'இம்போசிஷன்' எழுதி வரும்படிச் செய்யலாமே?

government school students
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe