ADVERTISEMENT

திமுக அரசுக்கு எதிரான போராட்டம் - ஆர்ப்பரித்த எடப்பாடி பழனிசாமி!

09:51 PM Sep 29, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT


விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வைக் கண்டித்தும், விலைவாசி உயர்வுக்குக் காரணமான தி.மு.க. அரசைக் கண்டித்தும், விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் கண்டனப் பொதுக்கூட்டம், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. தென்மாவட்டத்திலும் தனக்கு செல்வாக்கு உண்டு என்பதை நிரூபிப்பதற்காக சுற்றுப்பயணத் திட்டம் வகுத்துள்ள அ.தி.மு.க. இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இக்கூட்டத்தில் சிறப்புரையாற்ற வந்திருந்தார்.

ADVERTISEMENT

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியபோது, “ஒரு சமுதாயத்திற்கு எதிரானவர் எடப்பாடியார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால், அனைத்து சமுதாயத்தினருக்கும் தலைவனாக, பாதுகாவலனாகத்தான் எடப்பாடியார் திகழ்கிறார். இந்தக் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கு முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், நாயுடு சமுதாயத்தினர், முத்தரையர் சமுதாயத்தினர், இஸ்லாமிய சகோதரர், கிறிஸ்தவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து எடப்பாடியாரை வரவேற்றுள்ளனர்.

அனைத்து சமுதாய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக எடப்பாடியார் திகழ்கிறார். எடப்பாடியார் ஆட்சியில்தான் எல்லாம் கிடைத்தது. எல்லா விலையையும் கட்டுக்குள் வைத்திருந்தார். தற்போது எல்லா விலைவாசியும் உயர்ந்து விட்டது. பாட்டு பாடியே பெயர் வாங்கியவர்கள் அ.தி.மு.க. தொண்டர்கள். குற்றம் சொல்லியே பெயர் வாங்குபவர்கள் தி.மு.க.வினர்” என்றார்.

சிறப்புரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “மிகப்பெரிய மாநாடு போல இந்த கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது. விருதுநகர் மாவட்டம் அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த கண்டன பொதுக்கூட்டம் அமைந்திருக்கிறது. எத்தனை சோதனைகள் வந்தாலும், அத்தனையையும், சாதனைகளாக மாற்றி காண்பிப்பவர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்பதற்கு இந்த கண்டனப் பொதுக்கூட்டமே சாட்சி. தற்போதைய முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சி என்று அடிக்கடி கூறிவருகிறார். எது திராவிட மாடல் ஆட்சி?

மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவிட்டனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏராளமான வாக்குறுதிகளை ஒவ்வொரு தேர்தல் பிரச்சார மேடையிலும் ஸ்டாலின் கூறினார். தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை இதுவரை தி.மு.க. நிறைவேற்றவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் என்பதற்காக, பொறாமை காரணமாக, அம்மா மினி கிளினிக்கை தி.மு.க. மூடிவிட்டது.

கமிஷன், கலெக்சன், கரப்சன்.. இதுவே இன்றைய தி.மு.க. ஆட்சியின் அவல நிலை. தி.மு.க. அமைச்சர்கள் மக்களிடம் அநாகரிகமாகப் பேசுகிறார்கள், நடந்துக் கொள்கிறார்கள். தி.மு.க. அமைச்சர் ஒருவர் பெண்களைப் பார்த்து, ஓசியில்தானே போகிறாய் என்று கேவலமாகப் பேசியிருக்கிறார். இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் எப்போது கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு, சில்லரை மாற்றிக் கொண்டிருக்கிறோம், விரைவில் கொடுப்போம் என்று நக்கலாகப் பதில் கூறியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். மத்திய அமைச்சராக இருந்த ஒருவர், மக்களை மிகவும் கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார். மாற்றுக் கட்சியிலிருந்து தி.மு.க.விற்கு வந்தவர்கள் குறித்து பேசும்போது, ஒரு அமைச்சர் கடுமையான வார்த்தையைப் பிரயோகித்திருக்கிறார்.

பொதுக்கூட்ட மேடையில் ஒரு அமைச்சர் பேசும்போது, குற்றவாளியை நிரபராதி ஆக்குவதும், நிரபராதியை குற்றவாளியாக்குவதும் எங்கள் கையில்தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

கரண்டைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதை எல்லாம் தாண்டி, கரண்ட் பில்லைப் பார்த்தாலே ஷாக் அடிக்கக்கூடிய நிலையில் மின்கட்டணம் உயர்ந்திருக்கிறது. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அமைச்சர்கள் வாய்க்குவந்தபடி பேசுவதும், தமிழக மக்களை ஏமாற்றுவதும்தான் திராவிட மாடல் ஆட்சி.

கல்வியில் 2030 -ஆம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை, 2019- ஆம் ஆண்டிலேயே அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அடைந்துவிட்டது. தமிழகம். இதுதான் அ.தி.மு.க. ஆட்சி. அதுதான் சாதனை. தி.மு.க. அமைச்சர்களை தமிழக முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும். ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு, அ.தி.மு.க. செயல்படுகிறது. ஒரு மதத்தையோ, குறிப்பிட்ட சமூகத்தையோ, சமுதாய மக்களையோ புண்படுத்தும் விதத்தில், அ.தி.மு.க. தலைவர்களோ தொண்டர்களோ பேசியது கிடையாது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக் கூட பிரச்சனையில், தி.மு.க. அரசு உரிய நேரத்தில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்காததால், பெரிய கலவரமாக மாறியது. இதற்கு தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும். பள்ளிப் பிரச்சனையில், பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும், பள்ளிக்கூடத்தைச் சேதப்படுத்தியவர்களும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். ஒரு பொம்மை முதல்வர் போல் ஸ்டாலின் ஆட்சி செய்து வருகிறார்.

தமிழகம் போதைப் பொருளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. மற்ற மாநிலங்களில் இருந்து போதைப் பொருள் தமிழகத்திற்கு வருகிறது என்று அமைச்சர்கள் கூறுவதை ஏற்கமுடியாது. போதைப் பொருள் கொண்டுவந்தாலும், போதைப் பொருளை விற்பனை செய்தாலும், கட்டுப்படுத்துவது தமிழக அரசின் கடமை. போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டாலின் திணறுகிறார்.

அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்ற ஒரே குறிககோளோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார். ஸ்டாலின் நினைப்பது ஒருக்காலும் நடக்காது. ஒரு அ.தி.மு.க. தொண்டனைக்கூட ஸ்டாலினால் தொட்டுக்கூட பார்க்க முடியாது. அ.தி.மு.க.வில், உழைப்பவர்கள் என்றும் உயர்ந்துகொண்டே இருப்பார்கள். உழைப்பவர்களுக்கு அ.தி.மு.க.வில் உரிய மரியாதை உண்டு. தி.மு.க.விலோ, பிழைப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை உண்டு. பதவிகளும் தருவார்கள்.

தி.மு.க. அரசு ஏமாற்றுகிறதே தவிர, எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முயற்சிக்கவில்லை. படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து ஏமாற்றுவதே தி.மு.க. நடத்தும் திராவிட மாடல் ஆட்சி.. ” என தி.மு.க. அரசு மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT