
திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி சேர்ந்த நாகேஷ் குமாரை மீன்பிடிப்பு குத்தகை பிரச்சனை காரணமாக, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இது சம்பந்தமாக மேற்கு மரிய நகரத்தைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியான பிரகாஷ் உள்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், உத்தரவின் பேரில் மாவட்டத்தில் அதிரடி நடவடிக்கை எடுப்பதற்காக ஏ.டி.எஸ்.பி.சந்திரன் மற்றும் வெள்ளைச்சாமி தலைமையில் இரண்டு டி.எஸ்.பி.க்கள், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், நான்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 30 காவல்துறையினர் கொண்ட இரண்டு தனிப்படை அமைத்து சிறுமலை, வாழக்காபட்டி, நத்தம், சாணார்பட்டி, கண்ணார்பட்டி, நரசிங்கபுரம் உள்பட சில பகுதிகளில் இருக்கும் மலை அடிவார கிராமங்களில் அதிரடி ஆய்வு செய்தனர்.
அப்போது, தவசிமடை, கொரசின்னம்பட்டியில் நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை கைது செய்து, அவரிடமிருந்து 5 நாட்டு துப்பாக்கிகள், கரி மருந்து மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படும் உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது சம்பந்தமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, "கடந்த காலங்களில் சிறுமலை மலைப் பகுதியில் கள்ளத் துப்பாக்கி புழக்கத்தில் இருப்பதாக தெரிய வந்ததின் பேரில் மலைக் கிராமம் பகுதிகள் தண்டோரா அடிக்கப்பட்டு கள்ளத் துப்பாக்கி இருந்தால் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் கள்ளத் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் மலையில் ஆங்காங்கே போட்டு விட்டு சென்றனர்.
அது போல் தற்பொழுது கள்ளத்துப்பாக்கிகள் யார் வைத்திருந்தாலும், அதை உடனடியாக ஏதாவது ஒரு இடத்தில் போட்டு விடுங்கள். அப்படி மீறி கள்ளத்துப்பாக்கிப் பதுக்கி வைத்து இருந்ததை நாங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவர்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.