‘If you find a fraudulent gang, you should report it to the Cyber Crime’-District Superintendent of Police

தமிழகத்தில் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் ஆசை வார்த்தை கூறி பணத்தை அபகரிக்கும் கும்பல் இன்றளவிலும் காணப்படுகிறது. இவர்கள் பல்வேறு விதமான யுக்திகளைக் கையாண்டு மக்களை ஏமாற்றுவதால் ஏமாற்றம் அடைபவர்கள் இவர்களை நம்பி பணத்தை இழந்துவிடுகின்றனர். இதனைத் தடுக்க அந்தந்த மாவட்ட காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துவது வழக்கம்.

Advertisment

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் மோசடி கும்பல்களிடம் ஏமாறாமல் இருப்பதற்கு முக்கிய அறிவுரைகளும் பிரத்யேக தொலைப்பேசி எண்ணையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். அதன்படி, "திருச்சியில் உள்ள நகரம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் விலை குறைவான குக்கர், இண்டெக்ஷன் ஸ்டவ், சோப்பு, தோசை தவா, கடாய், பணியாரச்சட்டி, சிறிய குத்து விளக்கு, சமையலறைப் பொருட்கள் விற்பதாகக் கூறிக்கொண்டு உங்கள் பகுதிகளில் புதிய நபர்கள் யாரேனும் வருவார்கள். அவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்து பொருட்களை விற்பனை செய்வர்.

Advertisment

அதன் பின்னர் உங்களின் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டு பரிசு கூப்பன் ஒன்று கொடுத்துச் செல்வார்கள். பின்னர் இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்களுக்கு ஸ்கூட்டி மற்றும் தங்க நாணயம் பரிசு விழுந்ததாக ஆசை வார்த்தைகளைக் கூறி, அதைப் பெறுவதற்கு GST மற்றும் வரி மட்டும் செலுத்த வேண்டும் என்று போன் செய்து உங்களை ஏமாற்றிப் பணம் பறிப்பார்கள். எனவே இதுபோன்ற நூதன முறையில் மோசடி செய்யும் நபர்களை உங்கள் பகுதியில் கண்டால் உடனே கீழே உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளரின் தொலைபேசி 9498156464 / 9443651660 எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்" என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.