Advertisment

திருவிழாக்களில் நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் வரையறைகள் தீர்மானிக்கப்படுவது குறித்து பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஏற்கனவே பலமுறை தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், இனிமேல் ஆடல் பாடல் நிகழ்வுகளுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரூரை சேர்ந்த ஒருவர் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் ஆடல் பாடலுக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளிக்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை பின்பற்றாமல் மீண்டும் இது தொடர்பாக பொது நல வழக்கு தாக்கல் செய்கின்றனர். இனி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.