/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ee2.jpg)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அரசுக்கு எதிராகப் போராடும் பேசும் அரசியல் பிரமுகர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல என்றாலும்கூட, தனிமனித வஞ்சம் தீர்க்கம் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சனநாயகத்தின் மூலமே அடக்குமுறைகளை ஏவுகிற அரசப்பயங்கரவாதப்போக்கினை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திருமுருகன் காந்தியின் மீது பல்வேறு வழக்குகள் வேண்டுமென்றே தொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார். திருமுருகன் காந்தியின் மீது அடுக்கடுக்காக வழக்குகளைப் பாய்ச்ச வேண்டியதன் அவசியமென்ன? இவ்வளவு நாட்கள் இந்த வழக்கினைத் தொடுக்காது என்ன செய்துகொண்டிருந்தார்கள்? ஒவ்வொரு வழக்காகத் தொடுக்கப்பட்டுத் திட்டமிட்டு அலைக்கழித்து உடல் நலிந்த நிலையிலும் சரியான சிகிக்சை அளிக்காமல் பழிவாங்கும் நடவடிக்கை எதற்கு? அரசுக்கு எதிரான போக்கினைக் கையாண்டால் வழக்கினைத் தொடுப்பார்கள் என்றால் இது சட்டத்தினைத் தனது அரசியல் பகைமைக்காகப் பயன்படுத்துகிற பாதகச் செயலில்லையா?
நேற்று விடுதலையான கருணாசு மீது ஐ.பி.எல். முற்றுகைப்போராட்டத்தின்போது பங்கேற்றதற்காக மேலும் இரு வழக்குகள் தற்போது தொடுக்கப்பட்டிருக்கிறது. கருணாஸ் பேசியவற்றை ஒருபோதும் ஏற்க முடியாது. அக்கருத்துக்களில் நாங்களும் முழுமையாக முரண்படுகிறோம். மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்று தமிழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிற தம்பி கருணாஸ் இவ்வாறு பொறுப்புணர்வற்றுப் பேசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல! இதனையுணர்ந்தே தனது பேச்சுக்கு மனம்வருந்தி கருணாஸ் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும், அவர் கைது செய்யப்படுகிறார், பழைய வழக்குகள் தோண்டி எடுக்கப்பட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தம்பி திருமுருகன் காந்தியைச் சிறைப்படுத்தியிருக்கிற தமிழக அரசு, தம்பி கருணாசின் பேச்சை முன்வைத்து அவரைக் கைது செய்த தமிழக அரசு, காவல்துறையினரையும், உயர் நீதிமன்றத்தையும் கொச்சையான சொற்களில் இழித்துரைத்த எச்.ராஜாவைக் கைதுசெய்யாதது ஏன்? அவரைக் கைதுசெய்வதற்கென அமைக்கப்பட்ட தனிப்படை என்னவானது? எட்டுவழிச் சாலைக்கெதிராக முகநூலில் கருத்துத் தெரிவித்தவர்களையும், அதற்கெதிராய் சென்னை காந்தி மண்டபத்தில் பட்டினிப்போராட்டம் நடத்த முற்பட்டவர்களையும்கூடக் கைதுசெய்து சிறைப்படுத்துகிற தமிழக அரசு, இவ்விவகாரத்தில் தயக்கம் காட்டுவது ஏன்? முதல்வரை அவதூறாகப் பேசினாரெனக் கருணாஸ் மீது தொடுக்கப்பட்ட வழக்கு, முதல்வரையும், துணை முதல்வரையும் ‘ஆண்மையற்றவர்கள்’ என விமர்சித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி மீது ஏன் தொடுக்கப்படவில்லை.? ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களையும் மிகத் தரக்குறைவாக முகநூலில் விமர்சித்த எஸ்.வி.சேகர் காவல்துறையின் பாதுகாப்போடு பொதுவெளியில் உலா வந்தாரே அவரைக் கைதுசெய்ய மறுத்த மர்மம் என்ன? தங்கை சோபியா விமானத்திற்குள் முழக்கமிட்டதற்குக் கைது நடவடிக்கையைப் பாய்ச்சியவர்கள், சேலத்தில் பொதுமக்களைச் சந்தித்துக் கருத்துக் கேட்டதற்கு எங்களைக் கைதுசெய்தவர்கள், கரூரில் எமது கட்சிப் பிள்ளைகள் ஆற்றைத் தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்குக் கைது நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் எஸ்.வி.சேகர், எச்.ராஜா, குருமூர்த்திப் போன்றோருக்கு விதிவிலக்குத் தந்து பாதுகாப்பது என்பது சனநாயகத் துரோகம் இல்லையா?
மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகப் போராடுபவர்கள், பேசுபவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவதை நிறுத்தி தம்பி திருமுருகன் காந்தியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். தமிழக அரசின் ஒருதலைபட்சமான, பாரபட்சமுள்ள இந்நடவடிக்கைகள் யாவும் மக்களுக்குச் சட்டத்தின் மீது நம்பிக்கையைக் குலைக்கும் கொடுஞ்செயலாகும். இவையாவற்றையும் தமிழக மக்களும், படித்த ஒரு இளந்தலைமுறை கூட்டமும் மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆளும் அரசின் அத்துமீறல் போக்குகளுக்கும், அடிமை ஆட்சிமுறைக்கும் வருங்காலத்தில் முடிவுகட்டுவார்கள் என எச்சரிக்கிறேன் என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)