
சென்னையில் ஆவணம் இல்லாமல் கொண்டு வரும் பணத்தை நோட்டமிட்டு காவல்துறை, வருமான வரித்துறை மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து பறித்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு அதிகாரிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகம்மது கௌஸ் என்பவர் பல ஓமந்தூரார் மருத்துவமனை அருகே சென்றபோது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் ரூபாய் பணத்தை காவலர் மற்றும் அதிகாரி ஒருவர் பறிமுதல் செய்தனர். முகம்மது கௌஸ் கொடுத்த புகார் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங், வணிக வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். விசாரணையில் காவல்துறை, வருமான வரித்துறை மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் சிலர் கூட்டு சேர்ந்து ஆவணம் இல்லாமல் சிக்கும் பணத்தை பங்கிட்டு கொண்டது தெரியவந்தது.
இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது சைதாப்பேட்டை காவல்நிலைய சிறப்பு உதவிகள் சன்னிலாய்டு என்பது விசாரணையில் தெரிய வந்தது. சன்னிலாய்டும் ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னிலாய்டை விசாரித்ததில், தானும் ராஜாசிங்கும் டிசம்பர் 11ஆம் தேதி ஆயிரம்விளக்கு பகுதியில் 20 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை வழிப்பறி செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
அதனடிப்படையில் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. வணிகவரித்துறை அதிகாரிகளான சதீஷ், சுரேஷ், பாபு கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தற்போது ஜானகிராமன் என்ற வணிகவரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையர் அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல் அவருடைய கார் ஓட்டுநர் அப்துல்லா என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.