ADVERTISEMENT

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் நாங்கள் ஓடிவருவோம்... – கலெக்டரின் சிறப்பு ஏற்பாடு

07:09 PM Apr 04, 2020 | kalaimohan

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான யாசகர்கள் உள்ளனர். அதேபோல் திருவண்ணாமலை நகரத்திலும் பலர் உள்ளனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் பல யாசகர்கள், வீடற்றவர்கள், அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாதவர்கள் உள்ளனர்.

ADVERTISEMENT


அதேபோல் கிராமப்புறங்களில் குடும்பத்தாரில் கைவிடப்பட்டவர்கள், கணவன் அல்லது மனைவி இல்லாத அல்லது பார்த்துக்கொள்ள வாரிசு இல்லாதவர்கள் என பலர் உள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவுக்கு என்ன செய்வது என மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் விளைவாக சத்துணவு மையங்கள் மூலமாக கிராமப்புறங்களில் தனித்து உள்ளவர்களுக்கு உணவு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கிராமபுறங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் 54,171 நபர்களுக்கு 724 சத்துணவு மையங்கள் மூலமாகவும், 10 பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் 1245 நபர்களுக்கு 10 சத்துணவு மையங்கள் மூலமாகவும், 4 நகராட்சி பகுதிகளில் உள்ள 10,379 நபர்களுக்கு 5 அம்மா உணவகங்கள் மூலமாக அவர்கள் இருக்கும் இடத்துக்கே தேடிச்சென்று உணவு வழங்க வைத்துள்ளார்.

ADVERTISEMENT


அப்படியிருந்தும் இன்னும் பலர் ஒரு வேளை உணவுக்குகூட வழியில்லாமல் மாவட்டத்தில் உள்ளார்கள் என்கிற தகவல் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசித்து தன்னார்வலர்கள் மூலமாக அவர்களுக்கு உணவு வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் எங்களுக்கு உணவு இல்லை எனச்சொல்லி 9345487377 என்கிற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களைத் தேடி உணவு செல்லும். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் உணவு இல்லை என 9345462676 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் வீடு தேடி சென்று தரப்படும்.

மேலும், வயது மூப்பின் காரணமாக நடக்க முடியாமல் உள்ளவர்கள் 9345472203 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் வீடு தேடி அத்தியாவசிய பொருட்கள் கொண்டு சென்று தர ஏற்பாடு செய்து ஏப்ரல் 4ந்தேதி அதனை அறிவித்துள்ளார்.

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் முண்டாசு கவிஞன் பாரதி. தனி ஒருவர் யாரும் உணவில்லாமல் இருந்துவிடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்துவருவது கலெக்டரை விமர்சிப்பவர்களிடமும் பாராட்டுதலை பெற்றுத்தந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT