
குமரி மாவட்டத்தில் பிரதான தொழில்களில் ஒன்றாக உள்ளது மண்பாண்டம் தொழில். குடிசைத் தொழிலாக காணப்படும் இதில் சுங்கான்கடை, தலக்குளம், முட்டைக்காடு, புலியூர்குறிச்சி, மேல்புறம், காப்புக்காடு பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் தமிழகத்திலும் பல மாவட்டங்களில் இந்த தொழிலில் ஏராளமானோர் உள்ளனர்.
இங்கு உற்பத்தி செய்யும் மண்பாண்டங்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் போன்ற மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் பண்டிகையின் போது மண் பானைகளில் பொங்கல் இட்டு வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதே போல் கார்த்திகை தீப திருநாளில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி வணங்குவதும் முக்கியதுவம் பெற்றுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணத்தினால் கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் கொண்டாடப்படாததால் உற்பத்தி செய்யப்பட்ட மண் பானைகள், சட்டிகள் எதுவும் ஏற்றுமதி செய்யபடாமல் அப்படியே தேங்கி உள்ளன. இதனால் அந்த தொழிலாளர்கள் நஷ்டத்தில் வாழ்வாதாரம் இழந்து காணப்படுகின்றனர்.

இது குறித்து மண்பாண்டம் குடிசைத் தொழிலாளர்கள் சங்க தலைவர் சுகுமாரன் கூறும் போது, “ஒரு காலத்தில் வசதி படைத்தவர்களின் வீடுகளில் சில்வர், வெண்கலம் பாத்திரங்கள் பயன்படுத்தி வந்த நிலையில் நடுத்தரம் மற்றும் ஏழைகளின் வீடுகளில் மண் பானைகள் தான் பயன்படுத்தபட்டு வந்தது. தற்போது இவர்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல் மாறி அவர்களும் சில்வர், வெண்கலம் பாத்திரங்களுக்கு மாறிவிட்டனர். ஆனால் அந்த மண்பாண்டம் தொழிலாளர்களின் நிலை தான் இன்னும் மாறவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் அந்தத் தொழில் அழிவு நிலையை நோக்கி சென்றுள்ளதால். அந்தக் குடிசை தொழிலாளிகளின் எதிர்காலமும் கேள்வி குறியாக மாறி விட்டது. தற்போது இந்த ஆண்டும் கரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், அவர்கள் அடுத்த கட்டம் நகர முடியாத நிலைக்கு தள்ளபட்டு விட்டார்கள். இந்த நிலையில், தமிழக அரசு வழங்கியுள்ள பொங்கல் பரிசு பொருட்களில் மண் பானையும் இடம் பெறும் என்றிருந்தோம். அப்படி இடம் பெற்றிருந்தால் அந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் உயர்ந்து இருக்கும். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. எனவே தமிழக அரசு பொங்கல் பரிசில் கரும்பு விவசாயிகளுக்கு முக்கியதுவம் கொடுத்திருப்பது போல், மண்பாண்டம் தொழிலாளர்களின் வாழ்க்கையை காப்பாற்ற அடுத்த ஆண்டு பொங்கல் பரிசில் மண்பானையையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.