/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/udhay43434.jpg)
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அனல் பறக்கிறது. காலில் சக்கரம் கட்டாத குறையாகப் பம்பரமாய் சுற்றி ஓட்டு வேட்டையை நடத்தி வருகின்றார்கள் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள். இதனோடு கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தென்மாவட்டம் வந்த தி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், நெல்லை டவுண் வாகையடித் திடலில் மாநகராட்சியில் போட்டியிடுகிற தி.மு.க. வேட்பாளர்களை உதயநிதி ஸ்டாலின் ஆதரித்துப் பேசியபோது, "உள்ளாட்சியில் 50 சதவிகிதம் ஒதுக்கீடு காரணமாக இங்கே மகளிரை அதிகம் காணமுடிகிறது. பெண்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதை யாராலும் மாற்றவே முடியாது. திருச்சி, கரூர், நாகர்கோவில் என நான் போகிற இடமெல்லாம் தி.மு.க.விற்கு நல்ல எழுச்சியைக் காண்கிறேன். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள் ஆக்சிஜன் இல்லை என்ற நிலை இருந்தது.
அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின், கரோனா பாதிப்பிலிருந்து பல வழிகளிலும் மக்களை மீட்டார். வட இந்திய ஊடகங்களின் கருத்துக் கணிப்பில் இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வராக முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/udhaya4434.jpg)
சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்றார் தலைவர் கலைஞர். அவரது வழியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். கரோனா நிவாரணமாக 4 ஆயிரம் தருவேன் என்ற அவர், சொன்னபடி இரண்டு தவணையாக அதைத் தந்தார். மகளிருக்கு இலவசப் பேருந்து பயண வசதி; அதெப்படி முடியும் என அ.தி.மு.க. கேள்வி எழுப்பிய போது, அதையும் நடத்திக் காட்டிய முதலமைச்சர், தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தபடி பெட்ரோல் விலையை 3 ரூபாய், ஆவின் பால் விலையை 3 ரூபாய் குறைத்தார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையை முடக்கப் போகிறேன் என்கிறார். தமிழக சட்டசபையை உங்களால் முடிந்தால் முடக்கித்தான் பாருங்களேன். நமது மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 159 பேர் சட்டசபையில் உள்ளனர்" என நெல்லை மண்ணில் எடப்பாடி பழனிச்சாமிக்குச் சவால் விடுத்தார் உதயநிதி ஸ்டாலின்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)