சென்னை குரோம்பேட்டையை அடுத்த குறிஞ்சி நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (19). கடந்த 2021 ஆம் ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு முடித்த இவர், 'ஏ' கிரேட் கேட்டகிரியில் தேர்ச்சி பெற்றார். இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தோற்றதால் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மாணவன் ஜெகதீஸ்வரன் இறந்த சோகத்தில், அவரின் தந்தை செல்வசேகரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம்நீட் தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நடத்திய ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் தீர்மானத்தில் கையெழுத்திட மாட்டேன் என மாணவர்களின் பெற்றோருக்கு பதிலளித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் என் மண்; என் மக்கள் யாத்திரையில் இருக்கும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது இது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், ''நீட்டைப் பற்றி விதண்டாவாதமான பொய்களைச் சொல்லி அதை ஒரு பூதமாக சித்தரித்து,அதை ஒரு பேயாகக் காட்டி,அதனால் ஒரு மனச்சுமையை நம்முடைய குழந்தைகளுக்கு ஏற்படுத்தியுள்ளது திமுக. இன்னும் ஒரு உயிர் போச்சுன்னா அதுக்கு திமுக தான் காரணம். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி, ஆளுங்கட்சியாக இருக்கும் போதும் சரி நீட்டைப் பற்றி தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி மாணவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இன்று எங்கு நுழைவு தேர்வு இல்லாமல் இருக்கிறது. குடிமைப்பணி தேர்வுக்கு நுழைவுத்தேர்வு இருக்கிறது. ஐஐடி போக வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வு இருக்கிறது. ஐ.ஐ.எம் போகவேண்டும் என்றால் நுழைவு தேர்வு இருக்கிறது. நுழைவுத் தேர்வு இல்லாமல் எதுவுமே கிடையாது. அரசுடைய வேலை என்பது மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்து அரசுப் பள்ளிகளில் கோச்சிங்கை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் நீட்டில் டாப் ரேங்கில் வருவதற்கு எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் தமிழகத்தில் நீட் தேர்வு ஏற்றுக் கொண்டு விட்டோம் என்பதுதான் பொருள். இதை வைத்து அரசியல் செய்வதுநிச்சயமாக வேதனை அளிக்கிறது'' என்றார்.