Advertisment

தமிழ்நாட்டை அமளிக்காடாக்கிட காவிகளின் ஏற்பாடு அறிவிப்பா? எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: கி.வீரமணி

தந்தை பெரியார் சிலையை உடைப்போம் என்று முகநூலில் பதிவு செய்துள்ள எச்.ராஜா மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

திரிபுராவில் லெனின் சிலையை உடைத்ததுபோல, தமிழ் நாட்டிலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று முகநூலில் பதிவு செய்துள்ள பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜாமீது அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக இருக்கக் கூடிய எச்.ராஜா என்பவர் முகநூலில் பதிவு செய்துள்ளார்.

நேற்றுதான் தமிழக முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளை அழைத்து நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியாகப் பராமரிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அந்த அறிவுரையின் ஈரம் காய்வதற்குள்ளாகவே பா.ஜ.க தேசிய செயலாளர் தமிழ்நாட்டின் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத - தந்தை பெரியார் என்று ஒட்டுமொத்த மக்களால் மதிக்கப்படும் தலைவர் தந்தை பெரியாரின் சிலை உடைக்கப்படும் என்று முகநூலில் பதிவு செய்துள்ளார்.

Advertisment

இந்தத் தைரியம் இவர்களுக்கு எப்படி வந்தது? மத்தியில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது என்பதாலா? அல்லது மாநிலத்தில் இருக்கக் கூடிய ஆளும் கட்சி பா.ஜ.கவிற்கு கோலுக்கு ஆடுகிற, தங்களுக்குச் சாதகமான அல்லது தங்களால் மிரட்டப்படும் ஆட்சியாக இருக்கிறது என்ற நினைப்பிலா?

நாட்டில் கலவரத்தை உண்டாக்கவேண்டும் என்ற வேலையில், பா.ஜ.க - சங் பரிவார்க் கும்பல் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதைத்தான் இது தெரிவிக்கிறது. இதுபோன்ற பதிவுகளுக்கு எதிர்விளைவு வந்தால், அதன் நிலை என்னாகும் என்று நினைத்துப் பார்க்கவேண்டாமா? தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை இப்பொழுது தமிழ்நாட்டில் உருவாகிவிட்டதா? இது அரசியல் அநாகரிகம் ஆகும்.

அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக்கிட காவிகளின் ஏற்பாடு அறிவிப்பா?

சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்றுவதில் தமிழ்நாடு அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், தொடர்ந்து வன்முறை வெறித்தனப் பேச்சுகளில் ஈடுபட்டு வரும் இந்த ஆசாமிமீது, இந்தச் சந்தர்ப்பத்திலாவது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்குமா? எங்கே பார்ப்போம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

K.Veeramani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe