
சேலத்தில் சொகுசு கார், 2.50 கோடி ரூபாய் அசையா சொத்து, 33 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக தராவிட்டால் தன்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பகிர்வோம் என்று மிரட்டியதாக இளம்பெண் ஒருவர், கணவர் வீட்டார் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சேலம், நரசோதிப்பட்டி சக்தி நகரைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க பட்டதாரி இளம்பெண்ணுக்கும், தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் கரே (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. அப்போது, 33 லட்சம் ரூபாய் ரொக்கம், 14 லட்சம் ரூபாயில் சொகுசு கார், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோக பொருள்கள், 2.50 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் ஆகியவற்றை வரதட்சணையாகக் கொடுக்கும்படி மாப்பிள்ளை வீட்டார் கேட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, ஸ்ரீகாந்த் தரப்பில் கேட்டபோதெல்லாம் இளம்பெண்ணின் பெற்றோர் அவ்வப்போது பணம், நகைகளைக் கொடுத்துவந்துள்ளனர். கணவரின் தந்தை கரே பசயாமா, தாய் கரே ஸ்ரீசைலம் ஆகியோரும் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். கேட்டபடி வரதட்சணை தராவிட்டால் பெண்ணின் புகைப்படங்களைத் தவறாக சித்தரித்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்கள். நாளுக்கு நாள் கணவர் வீட்டாரின் சித்திரவதை அதிகமானதால் வெறுத்துப்போன அந்த இளம்பெண், சேலத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இதுகுறித்து அவர் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர், அந்த இளம்பெண்ணின் கணவர் ஸ்ரீகாந்த் கரே மற்றும் அவருடைய பெற்றோர் மீது மானபங்கப்படுத்துதல், மோசடி, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்டுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, விசாரணை நடத்திவருகின்றனர்.