/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2237.jpg)
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த வாரம் பெரும் மழைப் பொழிவு இருந்தது. இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் குடியிருப்புகளிலும், சாலையிலும் வெள்ள நீர் புகுந்து மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். மழையின் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் குழு அமைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுகவும், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, மக்கள் குறைகளைக் கேட்டு, நிவாரணங்கள் வழங்கிவருகிறது.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று (16.11.2021) சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் மழை பாதிப்பு குறித்து பார்வையிட்டு, நிவாரணங்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தற்போதைய அரசு சரியான முறையில் திட்டமிட்டு செயல்படாத காரணத்தினாலேயே மழைநீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநில அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளைக் கண்டறிந்து நிவாரண நிதி வேண்டி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினால், அதிமுகசார்பில் நானும், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் மத்திய அரசிடம் வலியுறுத்தி நிவாரண நிதியை விடுவிக்க கேட்டுக்கொள்வோம்.
மேட்டூர் அணை உபரி நீரை கடலில் கலக்காமல் நீரேற்று நிலையம் மூலம் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தைக் கொண்டுவந்தோம். இந்த நீர் நிரப்பும் திட்டம் தற்போது முடிந்திருக்க வேண்டும். ஆனால், இத்திட்டம் தாமதமாகி வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் நான் கூறியிருக்கிறேன். எனவே நீர்ப்பாசனத்துறை அமைச்சர் இத்திட்டத்தில் கவனம் செலுத்தி, உடனடியாக இந்தப் பணியை நிறைவேற்றி மேட்டூர் அணையிலிருந்து செல்லும் உபரி நீர் கடலில் கலக்காமல் நீரேற்று நிலையம் மூலம் 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை முடிக்க வேண்டும். பருவமழை காலத்திற்குள் 100 ஏரிகளிலும் உபரிநீரை நிரப்பினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.
வெள்ளநீர் தேங்குவதை நாங்கள் குற்றச்சாட்டாக கூறினாலும், அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு எதிர்க்கட்சியை மிரட்டுகிற விதமாகப் பேசுகிறார். மக்கள் படும் அவதிகள், துன்பங்கள், துயரங்களை நாங்கள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றால், அவர் விசாரணைக் கமிஷன் போடுவதாக கூறுகிறார். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)