
'தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிடில் தமிழகத்திற்கு நிதியை விடுவிக்க முடியாது' என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததை அடுத்து தமிழகத்தில் மும்மொழி கொள்கை மீண்டும் பேசுபொருளாகி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் மும்மொழி கொள்கையையும், மத்திய அமைச்சரின் பேச்சையும் எதிர்த்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி கொடுத்தாலும் புதிய தேசிய கல்விக் கொள்கையில் தமிழகம் கையெழுத்திடாது. நான் இருக்கும் வரை மும்மொழி கொள்கை தமிழகத்திற்கு வராது'' என திட்டவட்டமாகவும், காட்டமாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் பள்ளி சிறுமி ஒருவர் 'மத்திய அரசு நிதி கொடுக்காவிடில் என்ன நான் கொடுக்கிறேன்' என தன்னுடைய நிதி பங்களிப்பை அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடலூரைச் சேர்ந்த எல்கேஜி சிறுமி நறுமுகை வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ''மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு வணக்கம். எனது பெயர் நறுமுகை. நான் எல்கேஜி படிக்கின்றேன். இன்று நீங்கள் கடலூரில் பேசிய போது மத்திய அரசு 2000 கோடி நமக்கு தரவில்லை என்று கூறினீர்கள். தமிழ் மொழியை காக்கப் பாடுபடுவேன் என்றும் கூறினீர்கள். எனது பாலு தாத்தா, சாந்தி பாட்டி இருவரும் தமிழாசிரியர்கள். அதனால் மத்திய அரசு தரவேண்டிய பணத்தை நான் உங்களுக்கு தருகிறேன். எனது பங்களிப்பாக பத்தாயிரம் ரூபாய் அனுப்பி வைக்கின்றேன். தமிழே அரண். கடலூரிலிருந்து நறுமுகை. வணக்கம் ஐயா'' என தெரிவித்துள்ளார்.