Advertisment

'இதை அனுமதித்தால் அரியலூர் பாலைவனமாகிவிடும்'-பாமக அன்புமணி ராமதாஸ் கண்டனம்

'If this is allowed, Ariyalur will become a desert' - PMK Anbumani Ramadoss condemned

அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைக்க அனுமதித்தால் அரியலூர் பாலைவனமாகிவிடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி எனப்படும் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. பொன்விளையும் பூமியான அரியலூர் மாவட்டத்தை சீரழிக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி நிறுவனம் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

Advertisment

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 200-க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைத்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பந்தநல்லூர் திட்டப்பகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தின் 10 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்க ஒ.என்.ஜி.சி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு எண்ணெய் கிணறும் 25 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருப்பதாக ஓ.என்.ஜி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து மக்களை ஏமாற்றி திட்டங்களுக்கு அனுமதி பெற்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.

காவிரிப்படுகையில் ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல்லாயிரம் அடி ஆழத்திற்கு துளையிட்டு எண்ணெய், எரிவாயு போன்ற விலைமதிப்பற்ற இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் நிலத்தடி நீருடன் சேர்ந்து, கழிவு நீரும் கலந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தகைய சூழலில் மேலும் 10 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைக்கப்பட்டால், அதன் விளைவுகள் மிகவும் மோசமாகிவிடும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 10 புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைத்து, இயக்க தொடங்கினால் அரியலூர் மாவட்டம் பாலைவனமாக மாறிவிடும்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகவே காவிரி பாசன மாவட்டங்கள் எண்ணெய் நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறி வருகின்றன. ஒருபுறம் மிகப்பெரிய அளவில் எண்ணெய்யும், எரிவாயும் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை ஏற்படுத்துவதற்கும் முயற்சிகள் நடைபெற்றன. அத்திட்டங்களுக்கு எதிராகவும், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும், எனது தலைமையில் ஏராளமான போராட்டங்களும், நடைபயணங்களும் நடத்தப்பட்டன. அதன் பயனாக காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்தவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் அரியலூர் மாவட்டத்தில் 10 புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்வது நியாயமற்றது.

அரியலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் காவிரி படுகைக்குள் வருகின்றன. மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்று விதி இருக்கும் நிலையில், அதை மீறி 10 புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் முயல்வது குற்றமாகும்.

அரியலூர் மாவட்டத்தில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய பெரும் கடமையும், பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளன. அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறு திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதையும் அண்மையில் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்த்ததைப் போன்று, அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் முழுவதையும் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

Ariyalur pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe