Advertisment

அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி!

IAS officer gives birth at government hospital

அரசுத்துறைகளில் அதிகாரத்தின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள், அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகளைப் புறக்கணித்துவரும் நிலையில், கேரளமாநிலத்தில் பணியாற்றிவரும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்ட நிகழ்வு பலருக்கும் வியப்பையும்மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கரடிப்பட்டியைச் சேர்ந்தவர் தர்மலாஸ்ரீ (29). கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்று, கேரளமாநிலம் ஆலப்புழை மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றிவருகிறார். இவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு தாமரைக்கண்ணன் என்ற மருத்துவருடன் திருமணம் நடந்தது. இதையடுத்து, நிறைமாத கர்ப்பிணியான தர்மலாஸ்ரீ, தலைப்பிரசவத்திற்காக சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு வந்தார்.

Advertisment

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (16.08.2021) பிரசவத்திற்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புதன்கிழமை (ஆக. 18) இரவு அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் சுபா தலைமையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அன்றிரவு தர்மலாஸ்ரீக்கு பெண் குழந்தை பிறந்தது.

தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாக தர்மலாஸ்ரீ மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொண்ட நிகழ்வு பலருக்கும் வியப்பை அளித்ததோடு, பொதுமக்களிடையே அரசு மருத்துவமனை மீதான நம்பகத்தன்மையை மேலும் அதிகரித்துள்ளது.

தர்மலாஸ்ரீ போல, அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அரசுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளைச் சேர்ப்பதன் மூலமும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதன் மூலமும் வெகுசன மக்களும் அரசு ஸ்தாபனங்களை நோக்கி வர ஏதுவாக இருக்கும். மேலும், அரசு ஸ்தாபனங்களின் சேவையும் மேம்பட வழிவகுக்கும்.

Government Hospital Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe