பகர

திண்டுக்கல் மாநகராட்சி 35வது வார்டுக்கு உட்பட்ட லப்பை குளம் 11 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இந்த குளத்தில் கருவேலம் மரம் அதிக அளவில் உள்ளது. மேலும், பல வருடங்களாக தூர் வாரப்படாமல் மண் நிறைந்து உள்ளது. இதனை ரூ 45 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா,ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாநகராட்சி ஆணையர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசும்போது, "திண்டுக்கல் நகருக்கு புதிதாக குடிநீர் திட்டம் கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நான் மந்திரியாக இருந்தாலும் கவுன்சிலராக இருந்து நகரின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். திண்டுக்கல் நகரில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கள் அதிக அளவில் உள்ளது. இது தொடர்பாக உடனடியாக கூட்டம் நடத்தி ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு செய்தவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி அகற்றப்படும். இல்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்

Advertisment