
அண்மையில் வெடித்த நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா விவகாரத்தில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு ட்விட்டரில் ஒருவருக்கு 'சேரி' என்ற வார்த்தையை பதிவிட்டு சொன்ன பதில் பேசு பொருளாகி உள்ளது. அவரின் இந்த பேச்சுக்கு பல தரப்புகளில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியினர் குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு முன்னரே குஷ்புவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் குஷ்புவின் உருவ பொம்மை எரித்து போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு பேசுகையில், ''குடியரசுத் தலைவராக திரௌபதி முர்முவை தேர்ந்தெடுக்கும் பொழுது இதே காங்கிரஸ் தலைவர்கள் அவரை தீய சக்தி என்று சொன்னார்கள். அது ராஷ்டிரபதி அல்ல ராஷ்டி பத்தினி என்று சொன்னார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று உங்களுக்கு புரிகிறதா? ஒரு இடத்தில் குடிநீரில் மனிதக்கழிவு கலந்து மக்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு போராட்டம் நடத்தினார்களா? நாங்குநேரியில் படிக்கிற பசங்களுக்குள் ஒரு பிரச்சனை நடந்தது. அப்பொழுது போராட்டம் நடத்தினார்களா? அங்கு போய் இவர்கள் பிரச்சனை பண்ணினார்களா? நேற்று முன்தினம் இரண்டு தலித் மக்களை பைக்கில் தூக்கிக் கொண்டுபோய் ராடால் அடித்திருக்கிறார்கள். அதற்கு ஏதாவது வருத்தம் தெரிவித்தார்களா? அங்கு போய் ஏதாவது மறியல் பண்ணாங்களா?
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து இந்த நவம்பருக்குள் தமிழகத்தில் மட்டும் 450 வழக்குகள் பதிவாகி இருக்கு தலித் மக்களுக்கு எதிராக நடந்து கொடுமைகளுக்காக. 450 சம்பவங்களுக்கு நான்கு தடவையாவது இவர்கள் எங்காவது போராட்டம் பண்ணாங்களா? இந்த மாதிரி கோஷம் போட்டார்களா? இல்ல பொம்மை எரிச்சீங்களா? குஷ்பு வீட்டில் போராட்டம் வச்சா இரண்டு நாள் பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற காரணத்திற்காக நீங்கள் இந்த மாதிரி செய்கிறீர்கள். உங்களுக்கு பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு. என் சார்பாக உங்களுக்கு வாழ்த்துகள். நான் தவறாக வார்த்தையை பயன்படுத்தவில்லை. எந்த அர்த்தத்தில் பயன்படுத்தினேன் என்று தெளிவாக சொல்லிவிட்டேன். அதற்கான விளக்கமும் கொடுத்து விட்டேன். யாருக்கும் பயந்து சொன்ன வார்த்தையை பின் வாங்குவது நான் கிடையாது'' என்றார்.